

மதுரை: பொதுவாக அனல் காற்றும், வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படும் மதுரையில் கடந்த சில நாட்களாக கோடை வாசஸ்தலங்களை போல, நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் நண்பகல் வரை மூடு பனி காணப்படுகிறது.
மதுரையில் கோடையில் அக்னி நட்சத்திரத்தின்போது அனல் பறக்கும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக பரவலாக மழை பொழிவால் வைகை ஆறு, அதன் பாசனக் கால்வாய்களில் ஓரளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கண்மாய்களில் எப்போதும் தண்ணீர் தேங்கி உள்ளது. நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால் மதுரை சுற்று வட்டார கிராமங்களில் மரம், செடி, கொடிகள் தழைத்து திரும்பிய பக்கமெல்லாம் வயல்வெளிகள் பசுமையாக காணப்படுகிறது.
அதனால் மதுரை நகரில் காலநிலை சில நாட்களாக மாறி விட்டது. நகரில் மாலை 6 மணி முதலே குளிர் பரவத் தொடங்கி விடுகிறது. நள்ளிரவிலும், அதிகாலை தொடங்கி நண்பகல் வரை நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மூடு பனி நிலவுகிறது.
இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்கின்றன. குறிப்பாக கண்மாய்கள் உள்ள பகுதிகள், வைகை ஆறு உள்ள பகுதிகளில் அதிகாலை வேளையில் மூடுபனி புகை மூட்டம் போல ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
அதிகாலையில் நடைபயிற்சி செல்லும் மக்கள் இந்த காலநிலையை வெகுவாக ரசிக்கின்றனர். ஆனால், நுரையீரல் ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் இந்த மாறுபட்ட சூழலால் சிரமப்படுகின்றனர். தற்போது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் நேற்று காலை லேசான சாரல் பெய்து குளிரான சூழலை மேலும் அதிகரித்தது.