

விழுப்புரம்: திண்டிவனம் அருகே சின்ன நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சாந்தகுமார் (16), அதே கிராமத்தைச் சேர்ந்த தேசிங்கு மகன் தினேஷ்குமார் (16), பாலு மகன் புஷ்பராஜ் (17) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மாலை தீவனூரில் ஒரு பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, ஒரே பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
தீவனூர் - கூட்டேரிப்பட்டு சாலை பெரமண்டூர் அருகே வந்த போது முன்னால் சென்ற டிராக்டர் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தினேஷ்குமார் மற்றும் புஷ்பராஜ் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் உயிரிழந்தார். படுகாயமடைந்த புஷ்பராஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மயிலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.