வார்தா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்க: ஸ்டாலின்

வார்தா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்க: ஸ்டாலின்
Updated on
2 min read

'வார்தா' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கி அவர்களின் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிக் கடன்களை முதல்வர் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், '''வார்தா' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் இன்னும் மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். நிவாரணப் பணிகளுக்கு அமைச்சர்கள் குழு, அதிகாரிகள் குழு என்று அமைக்கப்பட்டிருந்தாலும், அந்தக் குழுக்கள் எல்லாம் மக்களின் சிரமத்தை இன்னும் போக்க முடியவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரில் மிகக் கடுமையான சேதங்களை ஏற்படுத்திய 'வார்தா' புயல் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களையும் விட்டு வைக்கவில்லை. இந்த இரு மாவட்டங்களிலும் கரும்பு பயிர்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. புயலில் சிக்கி வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து கிடக்கின்றன. பல பகுதிகளில் தென்னை மரங்கள் கூட முறிந்து விழுந்து விட்டன. கரும்பு, வாழை, தென்னை ஆகியவற்றை நம்பியிருந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி நிற்கிறது.

சென்னையில் பல இடங்களிலும் மின் தடைகள் உடனடியாக நீக்கப்படவில்லை. 72 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின் தடைகள் அரசு நிர்வாகம் முழு வேகத்தில் செயல்படவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இன்னும் பல பகுதிகளில் வீடுகள் மழை நீரால் சூழப்பட்டு, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தனைக்கும் 'வார்தா' புயல் பற்றிய எச்சரிக்கையை இந்த முறை உரிய காலத்திலேயே வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டது. மாநில அரசு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியது. ஆகவே புயல் காற்றால் மரங்கள் விழக்கூடும் என்பதையும், அதனால் மின் கம்பங்கள் சாயும் ஆபத்து இருக்கிறது என்பதையும் அரசு முன்கூட்டியே உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள மின்வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை அதிமுக அரசு முடுக்கி விட்டிருக்க வேண்டும்.

குறிப்பாக புயலால் பாதிக்கப்படாத மாவட்டங்களில் உள்ள மின்வாரியம் மற்றும் நகராட்சி ஊழியர்களே முன்கூட்டியே சென்னைக்கு வரவழைத்து புயல் பாதிப்பு பணிகளில் ஈடுபடுத்த தயார் நிலையில் வைத்திருந்திருக்க வேண்டும். ஆனால் 'வார்தா' புயலுக்குப் பிறகு சென்னை மாநகர மக்களும், புறநகர மக்களும் மின்தட்டுப்பாடால் குடிநீர் இன்றியும், அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இன்றியும், மூன்று நாட்கள் படும் சிரமத்தைப் பார்க்கும் போது அதிமுக அரசு புயலுக்கு முன்னால் வழக்கம் போல் அறிவிப்புகளை செய்ததே தவிர, உண்மையில் களப்பணிகளுக்கு மின்வாரியத்தையோ, சென்னை மாநகராட்சியையோ தயார்படுத்தவில்லை.

அறிவிப்பு செய்வது மட்டுமே அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று அதிமுக அரசு அலட்சியமாக இருந்தது வேதனைக்குரியது. அதனால் தான் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் செல்லும் அதிமுக அமைச்சர்கள், ஆளுங்கட்சி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது

புயலால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்திலும் இதே நிலைமை நீடிக்கிறது. பல இடங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை பார்வையிட கூட சில பகுதிகளில் இன்னும் யாரும் வரவில்லை என்று மக்கள் புலம்புகிறார்கள் என்ற செய்திகள் எல்லாம் வருகிறது.

நெற்பயிர்கள், சவுக்கு, வேர்கடலை பயிர்கள் என எல்லாம் பெரும் சேதத்திற்கு உள்ளாகி விவசாயிகள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். புயல் சேதங்களைப் பார்வையிடச் சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையே மக்கள் முற்றுகையிடும் அளவிற்கு அந்த மாவட்டத்தில் சேதங்கள் மிக கடுமையாகவும், அதிமுக அரசின் நிவாரணப் பணிகள் படுமெத்தனமாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆகவே அதிமுக அரசு அமைச்சர்கள் குழுக்களையும், அதிகாரிகள் குழுக்களையும் உடனடியாக நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அனைத்து உடனடி நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மழைநீர் தேங்கி கிடக்கும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உரிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசரத் தேவையாக இருக்கிறது. அதே போல் நெல், கடலை, சவுக்கு, வாழை, தென்னை என விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாய் நிற்பதால் அவர்கள் இழந்த பயிர்களுக்குரிய இழப்பீடுகளை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

முதற்கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவரின் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்'' என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in