Published : 09 Jan 2023 04:20 AM
Last Updated : 09 Jan 2023 04:20 AM
தூத்துக்குடி: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி:
தமிழக ஆளுநர் தொடர்ந்து குதர்க்கமான கருத்துகளை பேசி வருகிறார். தமிழகம் என்றாலும், தமிழ்நாடு என்றாலும் ஒன்று தான். தமிழ்நாடு என்பது ஏதோ பிழையான சொல்போல ஒரு தோற்றத்தை அவர் உருவாக்குகிறார். ஆந்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் என்பதில் உள்ள பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா என்பதில் உள்ள ராஷ்டிரா என்பதற்கு நாடு என்று தான் பொருள்.
இந்த மாநிலங்களுக்கு சென்று பிரதேசம், ராஷ்டிரா என இருக்கக்கூடாது என்று அவர் சொல்வாரா? ஆர்எஸ்எஸ் தொண்டரைபோல செயல்பட்டு வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் அசுத்தத்தை கலந்து அநாகரீக செயலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜனவரி 11-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
பொங்கல் விழா: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொருநை நல்லிணக்க பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். தமிழ் மாநில ஜமா அதுல் உலமா சபை தலைவர் காஜா மொய்னுதீன் முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரையாற்றினார். அப்துல் வகாப் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT