

சென்னை: நான் எப்போது பாஜகவில் சேர்ந்தேன் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் பாஜவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது, அவர் அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜவில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"நான் பாஜகவில் சேரவே இல்லை. பிறகு எப்படி விலக முடியும். இதுதான் தற்போதைய பத்திரிகைகளின் தரம். நான் கூறிய தகவலை தவறாக பதிவிட்டுள்ளார்கள். இந்த விவாதத்தில் அண்ணாமலை கூறியது சரியே. தங்களுக்கான ஒழுக்கங்களை வளர்த்து கொள்ளாமல் பிறரை கேள்வி கேட்க எந்த தகுதியும் ஊடகங்களுக்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.