Published : 08 Jan 2023 05:11 AM
Last Updated : 08 Jan 2023 05:11 AM
திருச்சி: தமிழகத்துக்கு தேவையான சிறந்த தலைவர் அண்ணாமலை என இந்திய ஜனநாயக கட்சி நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி எம்.பி.யுமான பாரிவேந்தர் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் நேற்று முன்தினம் மாலை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தனிநாடு பற்றி பேசுபவர்கள் பிரிவினைவாதிகளே. பிரிவினை பற்றி அன்று பேசியவர்கள்தான் இன்று தமிழ்நாடு பற்றி பேசி வருகின்றனர். ஆளுநர் சொல்வதில் தவறில்லை. இந்தியா முன்னேற வேண்டும் என பிரதமர் மோடி கடுமையாக உழைத்து வருகிறார். அந்த உழைப்பு வீண்போகாமல் இருப்பதற்காக, பிரிவினைவாதத்தால் மாநிலங்களின் ஒற்றுமை சீர்குலைந்துவிடாமல் இருப்பதற்காகவே ஆளுநர் இதுபோன்ற கருத்துகளை கூறுகிறார்.
வரும் மக்களவைத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு குறித்து தேர்தலின்போது முடிவு செய்யப்படும். கடந்தமுறை கூட்டணியில் சில குளறுபடிகள் இருந்தன. அந்த நிலை மீண்டும் தொடர வாய்ப்பில்லை. குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும். இலவசங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மதுக்கடைகளை மூட வேண்டும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறிய வயதில், பெரிய பதவிக்கு வந்துள்ளார். மிகச்சிறந்த அறிவாளி. அவர் இல்லாவிட்டால் இன்று எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டிருக்கும். அனைத்து புள்ளிவிவரங்களையும் தயாராக வைத்துள்ளார். வரலாறு தெரிந்து வைத்திருக்கிறார். ஐபிஎஸ் வரை படிப்பது சாதாரண செயல் அல்ல.
செய்தியாளர்களின் எந்த கேள்விக்கும் பதிலளிக்கிறார். அவர் அப்படி சொல்லும்போது, 50 முதல் 100 செய்தியாளர்கள் வரை அவரைச் சூழ்ந்து நின்றுகொண்டு சப்தமிட்டு கேள்விகளை எழுப்புகின்றனர்.
அவரிடம் போட்டிப் போட்டுக்கொண்டு சில கேள்விகளைக் கேட்பது முறையல்ல. செய்தியாளர்கள் சூழ்நிலையை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் முன்பே அடுத்தடுத்த நபர்கள் கேள்விகளைகேட்பதால் சூழ்நிலை மாறி விடுகிறது. மற்றபடி, தமிழகத்துக்கு தேவையான சிறந்த தலைவராக அண்ணாமலை உள்ளார். செய்தியாளர்களின் தேவையற்ற அழுத்தத்தால் ஏற்பட்ட பிரச்சினை அது. எதிர்பாராதது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT