Published : 08 Jan 2023 04:27 AM
Last Updated : 08 Jan 2023 04:27 AM
கோவை: நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து முதல்வர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார் என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.1000 ரொக்கம், பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, முழு கரும்பு ஒன்று வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தை 9-ம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வழங்கப்படும். அந்த தினங்களில் பொருட்களை வாங்க முடியாதவர்கள் 13-ம் தேதியும் அந்த பொருளை பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் தேர்தல் சமயத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தான் சிறப்பு பொருள் விநியோக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பாஜக தலைவர் மட்டுமல்ல, விவசாயிகளும் நியாய விலைக்கடையில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும் அரசுக்கு கடிதம் அளித்துள்ளார். தேங்காய் எண்ணெயை நியாய விலைக்கடையில் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று கண்டிப்பாக பரிசீலிக்கப்படும். அதேபோல், முன்னோட்ட திட்டமாக (பைலட் திட்டம்) தருமபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் அரிசிக்கு பதில் 2 கிலோ ராகி விரைவில் வழங்கப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில் முழுக்கரும்பு வழங்கவில்லை. ஒரு கரும்பை மூன்றாக வெட்டி சிறு, சிறு துண்டாக கொடுத்தனர். தற்போது முழுக்கரும்பு கொடுக்கிறோம். வயது முதிர்ந்தவர்கள், கைரேகை அழிவதால் பொருட்கள் வாங்க முடியாதவர்கள், கைரேகை பயன்படுத்த முடியாத மாற்றுத்திறனாளிகள் பயோ - மெட்ரிக் திட்டம் மூலம் பொருட்கள் வாங்க முடியாத சூழல் இருந்தது.
தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் நியாய விலைக்கடைகளிலும் பயோ-மெட்ரிக் மூலம் பொருட்களை வாங்குவதை போல், கண் கருவிழி திட்டம் மூலம் பொருட்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT