Published : 26 Dec 2016 06:22 PM
Last Updated : 26 Dec 2016 06:22 PM

முதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் பெரும்பான்மை பலத்தை ஆளுநர் உறுதி செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதா என்பதை தமிழக ஆளுநர் உறுதி செய்ய வேண்டும் என திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு எத்தகைய தாக்கங்களை அரசியலிலும் அதிமுகவிலும் ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?. அவர் மறைவு ஒரு வெற்றிடத்தை இட்டுச் சென்றுள்ளதா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிமுகவை வழி நடத்தியவர். நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது நான் துணை முதல்வராக இருந்திருக்கிறேன். இப்போது அவர் முதல்வராக வந்த போது எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் இருந்திருக்கிறேன். அரசியல் செய்வதற்கு ஜெயலலிதா போன்ற தலைவர் அதிமுகவில் இல்லை என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம்தான். ஜெயலலிதாவின் மறைவு அதிமுகவிற்குள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது பற்றி நான் கருத்து சொல்வது நாகரிகமாக இருக்காது.

திமுகவைப் பொறுத்தவரை எங்களுடன் அரசியலில் எதிர்துருவமாக செயல்பட்ட எம்.ஜி.ஆராக இருந்தாலும், ஜெயலலிதாவாக இருந்தாலும் அவர்களின் மறைவுக்குப் பிறகு தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை மேற்கொள்வதே வழக்கம். மற்றபடி வெற்றிடம் என்பதற்கு அரசியல் அகராதியில் இடமிருப்பதில்லை. எப்படிப்பட்ட வெற்றிடத்தையும் நிரப்பும் ஆளுமை மிக்கது ஜனநாயகம் என்பதில் எனக்கு அளவு கடந்த நம்பிக்கை உண்டு. வெற்றிடம் என்பது ஏற்பட்ட உடனேயே நிரப்பப்பட்டுவிடும் என்பது தானே அறிவியல் உண்மை

வருமான வரித்துறை நடத்திய சோதனை எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும்? ஒரு சாரார் இது பாஜகவின் திட்டமிட்ட நடவடிக்கை என்கிறார்கள். அதை நீங்கள் ஏற்கிறீர்களா? நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசில் அதிமுக சேரும் என்று கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

தமிழக அரசு நிர்வாகத்தின் தலைமை பீடம் தலைமைச் செயலகம். 300க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைவராக இருப்பவர் தலைமைச் செயலாளர். அந்தப் பதவிக்கு தகுதி, திறமை, நேர்மை, முதுநிலை அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மிகுந்த கவனத்தோடு தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் ராமமோகன் ராவை நியமிக்கும் போது இந்த குறைந்தபட்ச நடைமுறைகள், சீனியாரிட்டி போன்றவை கடைப்பிடிக்கப்படாமல் போனதற்கு காரணம் அவர் ஏற்கெனவே முதல்வருக்கு செயலாளராக ஐந்து வருடங்கள் பணியாற்றியதன் விளைவே என்று ஒருவருக்கு சந்தேகம் எழுந்தால் அதை யாறும் மறுக்க முடியாது.

நிர்வாக நடைமுறைகளை மீறி ஒருவரை முக்கியப் பதவிக்கு பெருத்த எதிர்பார்ப்போடும் உள்நோக்கத்தோடும் நியமிக்கும் போது அப்படி நியமனம் செய்தவர்களுக்கு அலாதியாக விசுவாசமாக இருக்கவே சம்பந்தப்பட்ட அதிகாரி விரும்புவார். அதுதான் ராமமோகன் ராவ் விஷயத்தில் நடந்திருக்கிறது. இத்தனைக்கும் அரசு ஆலோசர்கள் இருந்தும் இது போன்ற தவறுகள் நடந்திருப்பது கவலையளிக்கிறது.

இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த ரெய்டு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து விட்டு திரும்பியவுடன் ரெய்டு நடைபெற்று இருக்கிறது. மாநில முதல்வருக்கு தெரியாமல் இப்படியொரு ரெய்டு நடைபெற்றதா? தலைமைச் செயலாளரின் அறைக்கு அருகிலேயே இருக்கும் முதல்வருக்கு தெரியாமல் ரெய்டு நடைபெற்றது என்றால் அது பற்றி ஏன் முதல்வர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார்? தலைமைச் செயலகத்திற்குள் மத்திய ராணுவ துணை படையினரை அழைத்து வந்ததைக் கூட முதல்வரிடம் சொல்லவில்லையா? இப்படி தார்மீக ரீதியாகவும், மாநில உரிமை என்ற அடிப்படையிலும் பல கேள்விகள் இந்த ரெய்டு பற்றி எழுந்துள்ளன.

மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு, அவர் அதற்குமுன் ஆதரவளிக்காத, வெளிப்படையாகவே கடுமையாக எதிர்த்த மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்தது குறித்து அப்போதே கேள்வி எழுப்பியதும் திமுகதான். எங்களைப் பொறுத்தவரை, அரசியல்ரீதியாக இரண்டு கட்சிகள் உறவு கொள்வதோ எதிரெதிர் திசையில் நடப்பதோ இயல்பானது. ஆனால், அதற்கு தமிழக மக்களின் நலனையும் தமிழகத்தின் வளர்ச்சியையும் பகடைக்காயாக்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே கரூர் அன்புநாதனில் தொடங்கி, முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் வருமான வரித்துறையினரின் சோதனைக்குள்ளாயினர். அதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா இறந்த பிறகு, இப்போது தலைமைச் செயலாளர் வரை பிடியில் சிக்கியிருக்கிறார். தலைமைச் செயலகமும் சோதனைக்குள்ளாகியிருக்கிறது. ஊழல் நிறைந்த மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை கிடையாது. அதன் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை இல்லை.

அதனால் தான் வருமான வரித்துறை நடவடிக்கையை வரவேற்ற நான் உண்மைத் தகவல் என்ன என்பதை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். மத்திய அரசு தமிழக அரசை மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நினைக்கிறதா என்பதை பிரதமரைச் சந்தித்து தனிப்பட்ட முறையில் பேசிவிட்டு திரும்பியிருக்கும் முதல்வரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

அரசியல் சட்டரீதியாக பதவியில் இல்லாதவருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளீர்கள். ஆனால் அதிகாரிகளும் அமைச்சர்களும், ஏன் முதல்வர் கூட போயஸ் தோட்டம் சென்று சசிகலாவை அடிக்கடி சந்திக்கிறார்களே. அது குறித்து உங்கள் கருத்து என்ன?

முதல்வர், அமைச்சர் ஆகியோர் எடுத்துக் கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்திற்கு முற்றிலும் விரோதமாக இது போன்ற சம்பவங்கள் அதிமுக ஆட்சியில் சர்வசாதாரணமாக நடக்கின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அரசியல்சட்ட அந்தஸ்து இல்லாத ஒருவரை வீடுதேடிச் சந்திப்பதும், அரசியல் தலைமை ஏற்க வாருங்கள் என்று துணை வேந்தர்களே சென்று அழைப்பு விடுப்பதும் சகித்துக் கொள்ள முடியாத அசிங்கம். இதை தடுக்க வேண்டிய பொறுப்பு வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு இருக்கிறது என்றே கருதுகிறேன். அதனால் தான் துணை வேந்தர்கள் சந்தித்தது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

போயஸ் தோட்டப் பாதுகாப்பு குறித்து நான் எழுப்பியுள்ள கேள்வியில் நியாயம் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு, தீவிரவாத ஒழிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு பயன்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரிகளை ஆட்சி பொறுப்பில் இல்லாதவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு- அதுவும் 240 பேருக்கு மேல் எண்ணிக்கையில் காவல்துறையினரை அங்கு நிறுத்தி வைத்திருப்பது தவறான முன்னுதாரணம். அரசின் பணத்தை இப்படி வீணடிக்கக் கூடாது. ஆகவேதான் போயஸ் தோட்டத்தில் உள்ள காவல்துறை பாதுகாப்பை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறேன்.

தற்போது சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று பல அமைச்சர்களே கோரிக்கை வைக்கிறார்கள். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இது சரியான நடைமுறையாக இருக்குமா? ஒரு வேளை அது அக்கட்சியின் உட்கட்சி பிரச்சினை என்று விட்டுவிடலாமா ?

அதிமுகவுக்குள் நடக்கும் உள்கட்சி பிரச்சினைகள் குறித்து நான் கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. முதல்வர் தலைமையில் உள்ள அமைச்சரவைக்கு கூட்டு பொறுப்பு இருக்கிறது. ஆனால் பதவியேற்ற 20 தினங்களுக்குள் முதல்வர் இன்னொருவருக்காக தன் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவரின் கீழ் உள்ள அமைச்சர்களே வெளிப்படையாக பேட்டியளித்திருப்பது முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒட்டு மொத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லையா என்ற அரசியல் சட்ட கேள்வியை எழுப்பியிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக நியமித்தவர் ஆளுநர். ஆகவே முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மெஜாரிட்டி இருக்கிறதா, அவர் தலைமையிலான இந்த அரசு ஸ்திரத்தன்மையுடன் நீடித்து நிலைக்குமா என்பதை மாநில நலன் கருதி சட்டமன்ற ஜனநாயக விதிமுறைகளின் துணையுடன் தீர்மானம் செய்ய வேண்டிய பொறுப்பு அரசியல் சட்டப்படி மாநில ஆளுநருக்கு இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த விருதை வழங்கக்கூடாது என்று பாமக எம்.பி அன்புமணி ஏற்கெனவே கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து உங்கள் நிலைபாடு என்ன?

என்னைப் பொறுத்தவரை, இத்தகைய விருதுகள் மட்டுமே ஒருவரின் முழுத்தகுதியையும், ஆளுமையையும் நிர்ணயித்து விடாது எனக் கருதுகிறேன்.

தற்போதுள்ள அரசியல் சூழலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் அது திமுகவுக்கு சாதமாக அமையும் என்று நினைக்கிறீர்களா?

முதல்வராக ஜெயலலிதா இருந்த போதே உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தாலும், திமுகதான் வெற்றி பெற்றிருக்கும். அதற்கு பயந்து தான் மறைமுக தேர்தல் முறையை புகுத்தி சட்டமன்றத்தில் அவசர அவசரமாக விவாதமே இல்லாமல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். எப்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றாலும் திமுக அமோக வெற்றி பெறும்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ளார். அவர் தீவிரமாக செயல்பட முடியாத நிலைமை உள்ளதால் கட்சியின் செயல் தலைவராக உங்களை நியமிக்க இருக்கிறார்களா?

தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் மருத்துவமனை சார்பில் எவ்வித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான அறிக்கை தரப்பட்டிருக்கிறது. தலைவரின் வயது காரணமாக சில தளர்வுகள் இருக்கலாம். ஆனாலும் அவரது கருத்துகளும், வழிகாட்டுதல்களும் எப்போதும் தொடரும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x