

சென்னை: நிகழாண்டில் பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு,சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழக்கமான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பரில் முடிந்தது.
இதையடுத்து, 5 சிறப்பு ரயில்கள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இந்த சிறப்பு ரயில்களின் டிக்கெட் முன்பதிவும் சில நிமிடங்களிலேயே முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது. இதனால், சொந்த ஊருக்கு ரயிலில் முன்பதிவு செய்யநினைத்த பலருக்கு ஏமாற்றமே கிடைத்தது. எனவே, முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தெற்கு ரயில்வே ரயில் பயனர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டிய ராஜா கூறியதாவது: கரோனாவுக்கு முன்பு, பண்டிகைக் காலத்தில் ரயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத மக்களுக்காக, பகல் நேர முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, பண்டிகைக் காலத்தில் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படாமல் உள்ளது.
எனவே, நிகழாண்டில் பொங்கல் பண்டிகைக்காக, சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னை - நாகர்கோவில் இடையே 2 முன்பதி வில்லாத சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். இது ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.