Published : 08 Jan 2023 04:07 AM
Last Updated : 08 Jan 2023 04:07 AM

ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் இணைந்து இயங்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலினிடம் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

கே.பாலகிருஷ்ணன் | கோப்புப் படம்

சென்னை: ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் இணைந்து இயங்க முடிவு எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது, கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இச்சந்திப்பின்போது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் உடன் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வர்ணாசிரம அடிப்படையில் பெண்கள் மேலாடை அணிவதற்கு இருந்ததடையை எதிர்த்து நடைபெற்ற வீரஞ்செறிந்த தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு விழா கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். புரட்சியாளரும், உலகப் புகழ்பெற்ற மார்க்சிய சிந்தனையாளருமாகிய சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, அவரது மகள்ஸ்டெஃபானி ஆகியோர் தமிழகம் வருகின்றனர்.

சென்னையில், வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள வரவேற்பு விழாவில் முதல்வர் பங்கேற்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து தமிழக அரசுக்கு, தமிழக மக்களுக்கு விரோதமாகவும், பழமைவாத சனாதனகருத்துகளையும், அரசியல் சாசனத்துக்கு முரணாகவும் பேசி வருகிறார்.

புதிய கல்விக் கொள்கையை அமலாக்க முயற்சிப்பதோடு, ஆன்லைன் விளையாட்டு தடை சட்ட மசோதா உள்ளிட்ட தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு பெயரை பயன்படுத்துவது தவறு என பேசியுள்ளது அரசியல் சாசனத்துக்கு விரோதமானதாகும். ஆளுநரின் இந்தப் போக்கை எதிர்த்து தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், ஜனநாயக இயக்கங்களும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன.

அது குறித்த தமிழக மக்களின் கொந்தளிப்பான எதிர்ப்பு உணர்வுகளை முதல்வரிடம் தெரியப்படுத்தினோம். இந்த விஷயத்தில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும். இயக்கத்தை தொடங்கி போராட்டம் நடத்த வேண்டுமென தெரிவித்தோம். அதுபற்றி பரிசீலனை செய்வதாக முதல்வர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x