

சென்னை: சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவிடாமல் செய்ததன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சியை அதிமுகவும் பாஜகவும் தடுத்தன என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, தனது வாழ்க்கை பயணம் குறித்து எழுதிய 'பாதை மாறா பயணம்' நூல் வெளியீட்டு விழா, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. நிகழ்வில், நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட முதல்பாகத்தை தி.க. தலைவர் கி.வீரமணியும், இரண்டாவது பாகத்தை கவிஞர் வைரமுத்துவும் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கருணாநிதியின் தொண்டர் பற்றாளர் என அனைத்தையும் கடந்தவர் டி.ஆர்.பாலு. கட்சி மற்றும் நாட்டுக்காக அவர் ஆற்றிய பணியைபாராட்டுவதற்கு முன் இந்த புத்தகத்தை எழுதியதற்கு பாராட்டுகிறேன். அண்ணாவும் பெரியாரும் க.அன்பழகனும் வாழ்க்கை வரலாற்றை எழுதவில்லை.
போராட்டங்கள் தியாகங்கள், இதில் பயணித்த தோழர்களின் பங்களிப்பை தொகுத்து நூலாக பதிவுசெய்ய வேண்டும் என்பதைவேண்டுகோளாக முன்வைக்கிறேன். இங்கே பேசும்போது கி.வீரமணி சேது சமுத்திர திட்டத்தை பற்றி குறிப்பிட்டார். சேது சமுத்திர திட்டத்தை தடுத்தது பாஜக. இன்று ராமேசுவரம் கடல் பகுதியில் ராமர் பாலம்இருந்ததாக உறுதியாக கூற முடியாது என பாஜக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகிறார். கடந்த 1967ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி சேது சமுத்திர திட்டத்துக்காக எழுச்சி நாளை தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நடத்தினார்.
அதற்கு பிறகு அந்த திட்டத்தை செயல்படுத்த கருணாநிதி விரும்பினார். அப்போது 2004-ல் ரூ.2427 கோடியை ஒதுக்கி மத்திய அரசுநிறைவேற்ற முயற்சி எடுத்தமைக்கு காரணமாக இருந்தவர் டி.ஆர்.பாலு. இதை தடுக்காமல் இருந்திருந்தால் கடந்த 18 ஆண்டுகளில் எவ்வளவோ பயன்களை தமிழகம்அடைந்திருக்கும். தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும் பெருமை வந்து சேர்ந்திருக்கும். நாட்டின் அந்நிய செலாவணி வருவாய் அதிகரித்திருக்கும். இத்தனை வளர்ச்சிகளையும் பாஜகவும் அதிமுகவும் அன்று தடுத்தன.
இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் டி.ஆர்.பாலு ஈடுபட வேண்டும். இது முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் கனவு திட்டம். இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதற்கு பக்கபலமாக இருப்போம். இவ்வாறு முதல்வர் பேசினார். முன்னதாக நூலாசிரியர் டி.ஆர்.பாலு பேசியதாவது: இந்த இயக்கத்தில் சேர்ந்து பழகிய 50 ஆண்டில் முதல்வரிடம் பெற்ற பயிற்சியே என்னுடைய பணிகளாக தொடர்கிறது.
முதல்வர் குடும்பத்தில் உள்ள முரசொலி மாறன், பாலு என்னும் சிலைக்கு வடிவம் தந்தவர். அந்த சிலைக்கு உயிர் கொடுத்தவர் கருணாநிதி. விலை உயர்ந்த ஆபரணங்களை அணிவித்தவர் முதல்வர். அதுதான் ஒளிவட்டம் வீசி தற்போது பிரகாசித்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையை அளித்த திமுகவின் தொண்டனாக தொடர்ந்து நீடிப்பேன் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, உதயநிதி, தாம்பரம் சட்டப் பேரவை உறுப்பினரும் மாநகரச் செயலாளருமான எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வை தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி. தொகுத்து வழங்கினார். ஆழி பதிப்பக உரிமையாளர் ஆழி செந்தில் நாதன் நன்றி தெரிவித்தார்.