

சென்னை: ஆவடி விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ‘ஆக்கிரமிப்பால் சுருங்கிய ஆவடி விளிஞ்சியம்பாக்கம் ஏரி: மழை நீரை சேமித்து வைக்க முடியாத அவலம்' என்ற தலைப்பில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் செய்தி வெளியாகி இருந்தது. அதில், விளிஞ்சியம்பாக்கம் ஏரி திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. நீர்வள ஆதாரத் துறைக்கு சொந்தமான அந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அப்பகுதியை சுற்றியுள்ள மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
போதிய பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாததால், ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு, அதன் பரப்பளவு 50 ஏக்கராக சுருங்கிவிட்டது. கவரபாளையம் கோவிந்தன்தாங்கல் ஏரியின் உபரிநீர்,கால்வாய் வழியாக விளிஞ்சியம் பாக்கம் ஏரிக்கு வருகிறது. இதன் உபரிநீர் பருத்திப்பட்டு ஏரிக்கு செல்கிறது. ஆக்கிரமிப்புகளால் இந்த உபரிநீர் கால்வாயை காணவில்லை. இதனால் இப்பகுதியில் மழை காலங்களில் வெள்ளம் ஏற்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.
நீர்வள ஆதார துறைக்கு உத்தரவு: இந்த செய்தி அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து, ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீர்வள ஆதாரத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஆவடி மாநகராட்சி தனது அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை. மாவட்ட ஆட்சியரும், நீர்வள ஆதாரத் துறையும், ஏரியை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை பிப்.6-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.