

கோவை: கோவை விழாவின் ஒரு பகுதியாக, ‘செட்டிநாடு திருவிழா - 2023’ நேற்று தொடங்கியது.
கோவை விழா கடந்த 4-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா அரங்கில் ‘செட்டிநாடு திருவிழா 2023’ நேற்று தொடங்கியது. கோவையில் முதல்முறையாக நடைபெறும் செட்டிநாடு திருவிழாவை செட்டிநாடு குழும நிறுவனங்களின் தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, “இந்த திருவிழாவை சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளனர். இங்குசுமார் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், தொழிலை மேம்படுத்தவும் நகரத்தார் சமூகத்தினருக்கு இந்த திருவிழா ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. நகரத்தாரின் பழக்கவழக்கங்களை இளம் தலைமுறையினர், பொதுமக்கள் தெரிந்துகொள்ளவும் இந்த திருவிழா உதவும்" என்றார்.
கொடிசியா ‘டி’ அரங்கில் காலை9.30 மணி முதல் இரவு 8.30மணி வரை செட்டிநாடு திருவிழாஇன்றுடன் (ஜன.8) நிறைவடைகிறது. இவ்விழாவில் செட்டிநாட்டின் பிரபலமான கோயில்கள், கலைப் பொருட்கள், செட்டிநாடு சைவ மற்றும் அசைவ சமையல் வகைகள், பலகார வகைகள், திருவிழாக்கள், கலாச்சார பழக்க வழக்கங்கள், ஆத்தங்குடி டைல்ஸ், சுண்ணாம்பு பூச்சு வகைகள், பாரம்பரிய விளையாட்டுகள் போன்றவற்றை நேரடியாகப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனை பார்வையிட அனுமதி இலவசம்.
தொடக்க விழாவில், ‘செட்டிநாடு திருவிழா 2023’ தலைவர்வி.ராமு, நகரத்தார் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.மணிவண்ணன், நகரத்தார் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் உறுப்பினரும், லட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநருமான முத்துராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.