Published : 07 Jan 2023 10:03 PM
Last Updated : 07 Jan 2023 10:03 PM

மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி சான்று கட்டாயம்: ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் ஜன 15-ம் தேதியன்றும், பாலமேட்டில் ஜனவரி 16-ம் தேதியன்றும், அலங்காநல்லூரில் ஜனவரி 17-ம் தேதியன்றும் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கும் மாடு உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் ஆகிய அனைவருக்கும் கரோனா தடுப்பூசி (2 டோஸ்) சான்று கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார். மேலும், அரசின் கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவேற்ற வேண்டும். தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வயது சான்றிதழ், கரோனா தடுப்பூசி (2 டோஸ்) சான்றிதழை பதிவேற்ற வேண்டும். மேலும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்ற சான்று வைத்திருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

அதேபோல், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகளையும் madurai.nic.in இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 கிராமங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படும். ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர், ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இவர்கள் இருவரும் கரோனா தடுப்பூசி (2 டோஸ்) சான்று, நிகழ்ச்சி நடைபெறும் 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்ற சான்றும் வைத்திருக்க வேண்டும். ஜல்லிக்கட்டினை காணவரும் பார்வையாளர்களும் கரோனா தடுப்பூசி (2 டோஸ்) சான்று, 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்ற சான்றும் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்த்தபின் தகுதியானவர்களுக்கு டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கலாம். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்துத் துறை அலுவலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் ஊடகத்துறையினர் அரசால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x