

மதுரை: ‘ரேஷன் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் வாகனங்களை காவல் நிலையங்களில் நிறுத்தி வைப்பதால் பலனில்லை’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நெல்லை மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் பலர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ரேஷன் அரிசி கடத்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை காவல் நிலையங்களில் நிறுத்தி வைப்பதால் பலனில்லை. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை தேவைப்படும் நேரத்தில் திரும்ப பெறுவது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் உத்தரவாத பத்திரத்தை பெற்றுக்கொண்டு வாகனங்களை ஒப்படைக்கலாம். அதன்படி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மனுதாரர்கள் தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த முதன்மை மாவட்ட நீதிபதி வங்கி கணக்கில் தலா ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். விசாரணையின் போது மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட வாகனங்களை ஆஜர்படுத்த வேண்டும். மனுதாரர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.