

சென்னை: போகிப் பண்டிகையின்போது பொதுமக்கள் பழைய பொருட்கள் எரிப்பதைத் தடுக்க புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளது சென்னை மாநகராட்சி. இதையொட்டி, சென்னைவாசிகளுக்கு மாநகராட்சி கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போகி பண்டிகையின்போது பொதுமக்கள் பொருட்களை எரிப்பதால் காற்று மிகவும் மோசடைந்து மக்கள் சுவாசிக்க சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, அதிகாலை எரிக்கப்படும் துணிகள், டயர், டியூப், பிளாஸ்டிக் போன்ற நச்சுப் பொருட்களால், காற்றில் நச்சு நுண் துகள்கள் அதிகளவில் படிந்து, காற்று மாசை ஏற்படுத்துகிறது. அந்தக் காற்றை சுவாசிக்கும் ஆஸ்துமா நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் மூச்சுத்திணறல் போன்ற உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், புகைமூட்டத்தால் விமான போக்குவரத்து முதல் சாலையோர போக்குவரத்து வரை பாதிக்கப்படுகிறது.
இவற்றை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி முதன்முறையாக, புது முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேவையற்ற நிலையில் உள்ள டயர், டியூப், துணிகள், பிளாஸ்டிக் பொருட்களை, மாநகராட்சித் துாய்மை பணியாளர்களிடம் வழங்கலாம். அந்தப் பொருட்களை பெறும் பணி சனிக்கிழமை முதல் துவங்குகிறது.
இதுகுறித்து மாநகராட்சி தலைமை பொறியாளர் மகேசன் கூறுகையில், "சென்னையில் ஒன்று முதல் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வரும் 14-ம் தேதி போகி பண்டிகைக்காக, பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் டியூப், பிளாஸ்டிக் ஆகிய பொருட்களை எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குப்பை சேகரிக்கும் வாகனங்களில் ஜனவரி 7 முதல் ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள், தங்கள் வீடுகளில் எரிக்க நினைக்கும் பொருட்களை மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களிடம் வழங்கலாம்.
இதில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை, ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் பயன்படுத்த கொடுக்கப்படும். மேலும், பயன்படுத்த முடியாத பொருட்கள், மணலியில் உள்ள இன்சினரேட்டர் ஆலையில் எறியூட்டப்படும். இந்த ஆலையில் எறியூட்டும் பொருட்களில் புகை மண்டலமாக வெளியே வராது. சாம்பாலாக மட்டுமே கிடைக்கும். அந்த சாம்பலும் பேவர் பிளாக் கற்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும். எனவே, சென்னையில் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேவையற்ற நிலையில் உள்ள பொருட்களை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கி, மாநகராட்சியின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று அவர் கூறினார்