இறுதிப் பட்டியல் வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி: தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்

சத்யபிரத சாஹு
சத்யபிரத சாஹு
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் 3,04,89,866 ஆண்கள், 3,15,43,286 பெண்கள், 8,027 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6,20,41,179 வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறினார்.

இது தொடர்பாக தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த நவ.9-ம் தேதி தொடங்கி டிச.8-ம் தேதி வரை நடைபெற்றன. இதில் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 10,54,566 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 10,17,141 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. பெயர் நீக்கம் தொடர்பாக 8,43,007 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இடப் பெயர்ச்சி, இறப்பு, இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக 8,02,136 பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதுதவிர, திருத்தம் தொடர்பாக 2,15,308 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது தமிழகத்தில் 6,20,41,179 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 3,04,89,866 பேர், பெண்கள் 3,15,43,286 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர். ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 6,66,295 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் 1,70,125 வாக்காளர்களும் உள்ளனர்.

மேலும், பட்டியலில் 3,310 வெளிநாடு வாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் 8 பேர் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது சேர்க்கப்பட்டனர். அதேபோல, 4,48,138 வாக்காளர்கள் மாற்றுத் திறனாளிகள்.

வாக்காளர் பட்டியலில் இளைஞர்கள் அதிக அளவில் இடம்பெற வேண்டுமென்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, 18-19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் 2,52,048 பேர், பெண்கள் 2,14,171 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 155 பேர் என மொத்தம் 4,66,374 வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

வாக்காளர் பட்டியலை சரிபார்க்க விரும்புவோர் ‘elections.tn.gov.in’ எனற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம். அல்லது ‘www.nvsp.in’ என்ற இணையதளம், ‘voter helpline app’ மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பெயர்கள் சேர்க்கப்படும்.

இந்த முறை, ஜனவரி 1-ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்திருந்தால்தான், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்றில்லை. 17 வயது பூர்த்தியடைந்திருந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். 18 வயது பூர்த்தியானதும் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பெயர் சேர்க்கப்படும்.

மார்ச் 31-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பிக்கலாம். ஜன. 4-ம் தேதி வரை தமிழகத்தில் 3.82 கோடி பேர் ஆதார் எண் இணைக்க விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு சத்யபிரத சாஹு கூறினார்.

2 லட்சம் பேர் அதிகம்

கடந்த ஆண்டு ஜன. 5-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியலில் 6.36 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இடைப்பட்ட காலத்தில் இரட்டைப் பதிவுகள் நீக்கம் உள்ளிட்டவை காரணமாக, கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6,18,26,182 வாக்காளர்கள் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல்படி 2,14,997 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். வாக்காளர் பட்டியல்படி அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 38.82 லட்சம், திருவள்ளூரில் 34.21 லட்சம், கோவையில் 30.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக அரியலூரில் 5,14,738, நாகையில் 5,58,930, நீலகிரியில் 5,80,507 வாக்காளர்கள் உள்ளனர். பொதுவாக, 40-49 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in