Published : 06 Jan 2023 07:04 AM
Last Updated : 06 Jan 2023 07:04 AM

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடல் தகனம்: அப்பாவு, தினேஷ் குண்டுராவ் அஞ்சலி

உடல்நலக்குறைவால் காலமான ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடலுக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அஞ்சலி செலுத்தினார்.

ஈரோடு: உடல்நலக்குறைவால் காலமான ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

பெரியாரின் கொள்ளுப்பேரனும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகனுமான திருமகன் ஈவெரா(46), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து அன்று இரவு ஈரோடு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் முத்துசாமி, நேரு, உதயநிதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், திருமகன் ஈவெரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தினருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருமகன் ஈவெரா உடலுக்கு நேற்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், பல்வேறு கட்சி பிரமுகர்கள், அமைப்புகளைச் சேர்ந்தோர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர்
தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்
கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு, எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், சுப்பராயன், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் அதியமான், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, திருமகன் ஈவெரா உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஆத்மா மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன், தாய் வரலட்சுமி, சகோதரர் சஞ்சய், மனைவி பூர்ணிமா, மகள் சமணா பங்கேற்றனர். தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x