

சென்னை: ‘இந்து தமிழ் திசை’யின் 2023 பொங்கல் மலரை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், குரோம்பேட்டையில் நேற்று வெளியிட்டார். மருத்துவர் எஸ். இளங்கோவன், லயோலா கல்லூரி முன்னாள் தமிழ் பேராசிரியர் அருணை பாலறாவாயன் ஆகியோர் பொங்கல் மலரைப் பெற்றுக்கொண்டனர்.
இந்து தமிழ் திசை 2023 பொங்கல் மலரில் உலகுக்கு வளம் தரும் சூரியன் குறித்த கேள்வி-பதில் பகுதியை எழுதியிருக்கிறார் பிரபல குவிஸ் மாஸ்டர் ஜிஎஸ்எஸ். தென் மாவட்டங்களில் பொங்கல் கொண்டாட்டங்களின்போது சாதாரண மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் பாரம்பரிய மருந்து குறித்து பேராசிரியர் ஓ.முத்தையாவின் கட்டுரை இடம்பெற்றுள்ளது. பொங்கல் விழா நாட்களில் சென்னையில் நடைபெற்றுவந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் குறித்து மற்றொரு கட்டுரை பேசுகிறது.
சினிமா பகுதியில் நடிகர் கமல் ஹாசனின் திரைப்பட நகைச்சுவை, திரைப்படங்களில் அரசியல் குறித்த 2 கட்டுரைகளுடன் கமல் ஹாசனின் நடிப்பு, அவருடனான நட்பு ஆகியவற்றைக் குறித்து நடிகர் நாசரின் விரிவான பேட்டியும் இடம்பெற்றுள்ளது. பன்னிரு ஆழ்வார்கள் குறித்து கே.சுந்தரராமன் எழுதிய விரிவான கட்டுரைகள் ஆன்மிகப் பகுதிக்குத் தனிச்சிறப்பு சேர்க்கின்றன.
பயணம் பகுதியில் கவிஞர் சக்தி ஜோதி, எழுத்தாளர் சாலை செல்வம், டாக்டர் வி.விக்ரம்குமார் ஆகியோரின் விரிவான பயண அனுபவக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. எழுத்தாளர்கள் தஞ்சாவூர்க் கவிராயர், எஸ். ராஜகுமாரன், ஜி.ஏ. பிரபா, பி.ஜி.எஸ். மணியன், கானா பிரபா, ப.ஜெகநாதன், அ. இருதயராஜ், கொ.மா.கோ. இளங்கோ உள்ளிட்டோரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
கவிஞர்களின் பொங்கல் கவிதைகள், உள்ளிட்டவையும் வாசிப்புக்கு தனி அனுபவத்தைத் தரும். 212 பக்கங்கள் கொண்ட பொங்கல் மலரின் விலை ரூ.150. பொங்கல் மலரை பெற 99406 99401 என்கிற வாட்ஸ்-அப் எண்ணில் பதிவு செய்துகொள்ளலாம்.