

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மின் வாரியத்துக்கான ரூ.6,353 கோடி வங்கிக் கடனில், நடப்பு ஆண்டு பங்களிப்பாக தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் வழங்குகிறது.
தமிழக மின் வாரியம், கடந்த பல ஆண்டுகளாக கடனிலும், இழப்பிலும் தவித்து வருகிறது. மின் வாரியத்தின் புதிய திட்டங்கள், நிலக்கரி வாங்குதல், உபகரணங்கள் வாங்குதல், ஊழியர்களின் சம்பளம் போன்ற செலவினங்களுக்காக, அவ்வப்போது நிதி பற்றாக்குறை ஏற்படும்போது, மின் வாரியம் சார்பில் அரசு மற்றும் தனியார் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கப்பட்டது.
இந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக வங்கிகளுக்கு ரூ.12,765 கோடி நீண்ட கால நிலுவையாக இருந்து வந்தது. இந்நிலையில், நலிந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு மறுசீரமைக்கப்பட்ட நிதி திட்டத்தை அமல்படுத்தி சலுகை வழங்கியது.
இதன்படி, 50 சதவீத கடன் தொகையை 10 ஆண்டுகளில் மின் வாரியம் கட்டி முடிக்குமாறு, வங்கிகள் தங்களது கடன் காலத்தை நீட்டித்து சலுகை வழங்கின. மீதமுள்ள 50 சதவீதத்தை ஐந்தாண்டுகளில் தமிழக அரசு செலுத்த திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில், 24 வங்கிகளின் கடன் தொகையில் 6,353 கோடியே 49 லட்சம் ரூபாயை, தமிழக அரசு ஐந்தாண்டுகளில் செலுத்துவதாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த தொகைக்கு தமிழக மின் வாரியத்திலிருந்து பங்குப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டு, அவற்றை தமிழக அரசு விலைக்கு வாங்குவதாக உறுதியளித்தது. இதில் நடப்பு நிதியாண்டில் ரூ.1,000 கோடிக்கான பத்திரங்களை வாங்கி, மின் வாரியத்துக்கான வங்கிக் கடனை அடைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த நான்காண்டுகளில் மீதமுள்ள தொகையையும், பங்குப் பத்திரங்களை வாங்கி, மின் வாரியக் கடனை தமிழக அரசு தீர்க்கும்.