Published : 06 Jan 2023 07:21 AM
Last Updated : 06 Jan 2023 07:21 AM
சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் தனிப் பிரிவில் மனு அளித்த பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கோயில் குத்தகை நிலங்களில் இருந்து விவசாயிகளை வெளியேற்றி, நிலங்களை ஏலம்விடும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையைக் கைவிட வேண்டும். வறட்சி உள்ளிட்ட காலங்களில் செலுத்தப்படாத குத்தகை பாக்கியை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
கோயில் அறக்கட்டளை நிலங்களில் குடியிருப்போரின் மனைகளை ஏலம் விடுவதையும் நிறுத்த வேண்டும். அவ்வாறான நிலங்களை அரசே வாங்கி, பாதிக்கப்படும் மக்களுக்கு 5 சென்ட் வீதம் இலவசப் பட்டா வழங்க வேண்டும். அங்கு வீடு கட்டவும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் சிறப்பு ஒதுக்கீடு பெற்றுத்தர வேண்டும். இதை வலியுறுத்தி மன்னார்குடியில் நடைபெற்ற மாநாட்டில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் அனைத்தும், முதல்வரின் தனிப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூரில் பெரியபாளையத்தை மையப்படுத்தி, 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் `திருவள்ளூர் சாட்டிலைட் பூங்கா' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நெல் விளையும் இப்பகுதியில் சாட்டிலைட் பூங்கா அமைப்பதை முதல்வர் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.
இதுபோன்ற திட்டங்கள் முதல்வரின் அனுமதி பெற்றுத்தான் நடைபெறுகிறதா என்று சந்தேகம் எழுகிறது. பரந்தூர் விமான நிலைய நடவடிக்கைகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை நிலையை விளக்கி, உரிய விளக்கம் அளிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும்.
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி பாசனப் பகுதி, காட்டுமன்னார் கோயில், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க கிணறு அமைத்து, ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மக்களும், விவசாயிகளும் போராடி வருகின்றனர்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை காப்பாற்ற வலியுறுத்தி, வரும் 10-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் முன் விவசாய சங்கங்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்பாக உரிய கொள்கை முடிவு எடுத்து, அதை அறிவிக்க முதல்வர் முன்வரா விட்டால் தமிழகம் போராட்டக் களமாக மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT