

சென்னை ராயப்பேட்டை வெஸ்ட் கோஸ்ட் சாலையில் திரைப்பட பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் மொரீசியஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றார். அப்போது அவரது பர்ஸ் திருடுபோனது. அதில் கொஞ்சம் பணமும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளும் இருந்தன. சில நாட்களுக்கு முன்பு அவர் சென்னை திரும்பினார்.
இந்நிலையில் திருடுபோன கிரெடிட் கார்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு 2 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.25 லட்சம்) எடுக்கப் பட்டிருப்பதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதிர்ச்சி அடைந்த உன்னி கிருஷ்ணன், இது குறித்து அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ உட னடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொடர்பு கொண்டு, அந்த கார்டின் செயல்பாட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்த கார்டுகள் தொழில்நுட்ப மோசடி கும்பலின் கைகளில் கிடைத்தால் உங்களது ரகசிய குறியீட்டு எண் இல்லாமல்கூட உங்களது பணத்தை அவர்களால் எடுக்க முடியும்’ என்றனர்.