

திருச்சி: இந்திய ரயில்வேயின் 161 ஆண்டுகால வரலாற்றை நினைவுகூரும் விதமாக, திருச்சி பாரதியார் சாலையில் ரயில் அருங்காட்சியகம் 2014-ம் ஆண்டு பிப்.18-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. ரூ.1.35 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் பழைய தென்னக ரயில்வேயின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தம் வகையில், உட்புற மற்றும் வெளிப்புற கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
உட்புற கண்காட்சியில் பிரிட்டிஷ் ஆட்சியின் பல்வேறு ஆவணங்கள், அப்போது, பயன்படுத்தப்பட்ட அரிய புகைப்படத் தொகுப்புகள், வரைபடங்கள், அரசிதழ்கள், ரயில்வே கையேடுகள் மற்றும் புத்தகங்கள் உள்ளன. மேலும், சகாப்த கலைப்பொருட்களான சீனா கண்ணாடி, கடிகாரங்கள், மணிகள், பழைய விளக்குகள், பணியாளர்கள் பேட்ஜ்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெளிப்புற கண்காட்சியில் சில பழங்கால நீராவி இன்ஜின்கள், 1930-ல் கட்டப்பட்ட கோச், பழைய நீராவி இன்ஜின், இங்கிலாந்து கம்பெனி பயன்படுத்திய வாகனம் ஆகியவை உள்ளன.
சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகத்துக்கு மாதந்தோறும் சராசரியாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு 98,263 பேர் இங்கு பார்வையாளர்களாக வந்து சென்றுள்ளனர். பார்வையாளராக வரும் பெரியவர்களுக்குரூ.10-ம், சிறியவர்களுக்கு ரூ.5-ம் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பூங்கா இருப்பதால் விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அருங்காட்சியகத்தில் உள்ள ஆவணங்கள், பழைய புகைப்படங்கள், கையேடுகள், புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை வருங்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் பொருட்டு அவற்றை டிஜிட்டல் மயமாக்க ரயில்வே வாரியம் முடிவு செய்தது. அதன்படி,ஓராண்டாக திருச்சி ரயில் அருங்காட்சியகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக முடிவுற்ற பணிகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறுகையில், ‘‘திருச்சி ரயில் அருங்காட்சியகத்தில் உள்ள 5,200 புத்தகம் மற்றும் ஆவணங்கள் 9 லட்சம் பக்க அளவில் உள்ளன. இவற்றை பாதுகாக்கும் விதமாக ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்கும் பணியை ரயில்வே வாரியம் முடுக்கிவிட்டுள்ளது. ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் இப்பணியில் அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்யும் பணி முடிவடைந்துவிட்டது.
தொடர்ந்து, அதற்கான www.railheritage.in என்ற பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 5.5 லட்சம் பக்கங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 3.5 லட்சம் பக்கங்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் இன்னும் 5 மாதத்தில் நிறைவடைந்துவிடும். இப்பணி முடிவடைந்தவுடன் இந்த ரயில் அருங்காட்சியகத்தில் உள்ள ஆவணங்களை உலகில் எந்த மூலையில் இருந்தும் பார்க்கலாம்’’ என தெரிவித்தார்.