

சேலம் நகர தங்கம், வெள்ளி மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பின்னர் தங்கம், வெள்ளி மற்றும் வைர நகை வியாபாரிகள் சம்மேளன மாநில தலைவர் ஸ்ரீராம் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பு நீக்கம் செய்து அறிவித்தது. அதன் பின்னர் தமிழகத்தில் தங்க நகைகளின் விற்பனை 90 சதவீதம் சரிவடைந்துள்ளது. மக்களிடம் பணப் புழக்கம் இல்லாததால், தங்கத்தின் மீதான நாட்டம் குறைந்துவிட்டது.
தமிழகத்தில் உள்ள சில தங்க வணிக நிறுவனங்கள் நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை, தள்ளுபடி என கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்து, மக்களை ஏமாற்றி வருகின்றன. தள்ளுபடி என்பது, தங்கத்தின் அடிப்படை விலையில் இருந்து செய்யப்படாமல், உற்பத்திக்கு பிந்தைய விலையில் இருந்து செய்துவிட்டு, அதனை தள்ளுபடி விளம்பரமாக செய்து வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான சிறு நகை வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.