

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்ததால், தமிழகத்தில் 5 லட்சம் பீடி தொழிலாளர்கள் ஊதியம் கிடைக்காமல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, சென்னை, சேலம், திருச்சி மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட டிரேட்மார்க் பீடி நிறுவனங்கள் உள்ளன. இந்நிறு வனங்களில் தலா 1,000 முதல் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வரை பீடி சுற்றுதல், பண்டல், லேபிள் ஒட்டுதல், விற்பனை, நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளில் வேலை செய்கிறார்கள். இதுதவிர இந்நிறுவ னங்களின் வேன், லாரிகளில் பீடிக்கட்டுகளை எடுத்து வருதல், இலைத்தூள் கொண்டு செல்லுதல், விற்பனைக்குப் பீடி அனுப்புதல் உள்ளிட்டவற்றிலும் நூற்றுக்கணக் கானோர் பணியாற்றுகிறார்கள். இவ்வாறு தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் பீடி தொழிலாளர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக் கிறது. இவர்களில் 4 லட்சம் பேர் வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளனர்.
கடந்த மாதம் 8-ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் தற்போது வரை, தமிழகத்தில் பீடி தொழிலா ளர்களுக்கு ரூ.200 கோடி வரை ஊதியம் பட்டுவாடா செய்யப் படவில்லை என்று தொழிற்சங் கங்கள் தெரிவிக்கின்றன. பல ஆயிரம் பேர் வேலை செய்யும் பீடி நிறுவனங்களில் வார ஊதியம், தின ஊதியம் வழங்குகின்றனர். இந்நிறுவனங்கள் ஊதியம் வழங்கு வதற்கான பணத்தை வங்கியில் எப்படி, எவ்வளவு எடுத்துச் செல்வது என்பது குறித்த தெளிவான வழிமுறைகள் அறிவிக்கப்படாத தால், ஊதியம் பட்டுவாடா செய்யப் படாமல் உள்ளது.
தனி நபர்கள் எவ்வளவு பணம் எடுக்க முடியுமோ, அதைத்தான் பீடி நிறுவனங்களும் எடுக்க முடிகிறது. இதனால் ஊதியம் பட்டுவாடா பாதிக்கப்பட்டிருக் கிறது. பீடி நிறுவனங்களுக்கான மூலப்பொருட்களை வாங்கி வர முடியவில்லை. பீடி விற்ற பணமும் வரவில்லை.
பீடிக்கு தேவையான இலை, தூள் ஆகியவை கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வர வேண்டும். அங்கேயும் புதிய ரூபாய் நோட்டுகள் கேட்பதால், கடந்த 3 வாரங்களாக மூலப்பொருட்களைக் கொள்முதல் செய்ய முடியவில்லை என்று பீடி நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
வங்கிக் கணக்கில் லட்சக் கணக்கில் செலுத்தினால் வருமான வரித் துறையின் நெருக் கடிக்கு ஆளாக நேரிடுமோ என்ற பயத்தில், பல பீடி நிறுவனங்களும், மூலப்பொருட்கள் விற்பனையாளர் களும் வங்கியில் பணம் பரி வர்த்தனை செய்யாமல் இருக்கின் றனர். கடந்த 3 வாரங்களாக பீடி உற்பத்தியை 50 சதவீதம் வரை நிறுவனங்கள் குறைத்துவிட் டன. இதனால், தினமும் வேலை யின்மையால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர்.
இதுகுறித்து அகில இந்திய பீடித்தொழிலாளர் சம்மேளன துணை தலைவர் ம.ராஜாங்கம் கூறியதாவது:
பீடித் தொழிலாளர்கள் வாரம் ரூ.800 முதல் ரூ.1,000 வரை ஊதியம் பெறுவர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. பிரதமர் அறிவித்தபடி வங்கியில் ஜீரோ பேலன்ஸ் கணக்கைப் பலர் தொடங்கினர். இந்த கணக்கில் தொடர்ந்து பணம் பரிவர்த்தனை இல்லாததால் கணக்கு காலாவதி யாகிவிட்டதாக வங்கிகள் தெரிவித்துவிட்டன.
தினம், வாரம், மாதம் அடிப் படையில் பீடி நிறுவனங்கள் ஊதியம் வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். கம்பெனி பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்தி, ஒவ்வொரு கம்பெனியும் கடந்த மாதம் வழங்கிய ஊதியம், இதர நிர்வாக செலவு தொகையை கணக்கிட்டு, அந்த அடிப்படையில் பீடி நிறுவனங்கள் வங்கிகளில் பணம் எடுத்துக்கொள்ளவும், முதலீடு செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
தினமும் போராட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம், முக்கூடல், கீழப்பாவூர் என்று பீடித் தொழிலாளர்கள் கணிசமாக உள்ள இடங்களில் பீடித் தொழில் செய்யும் பெண்கள் தற்போது நாள்தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்பெண்களுக்கு மொத்தமாக பணத்தைக் கடன் கொடுத்தவர்கள், பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறு கடும் நெருக்கடி அளித்து வருகிறார்கள். பணத்தைக் கேட்டு ஒருசில இடங்களில் பெண்களை மிரட்டும் செயலும் நடைபெறுகிறது. இந்த நெருக்கடிகளில் இருந்து தங்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பீடித் தொழிலாளர்களின் கோரிக்கையாகும்.