

‘வார்தா’ புயலைத் தொடர்ந்து காய்ச்சல் பரவாமல் தடுக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 332 பேருக்கு இலவச நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் பெய்த புயல் மழையால் பள்ளமான இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் கொசுத் தொல்லையும் அதிகரித்து காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக சுகாதாரத்துறை சார்பில் நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்பட்டன.
டிசம்பர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆட்டோ, ஜீப்களில் நில வேம்பு கசாயம் கொண்டு செல்லப்பட்டு பொது மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. சென்னையில் வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஐஸ்ஹவுஸ், வடபழனி, டிஜிபி அலுவலகம், சுற்றுப்புறங்கள் என 50 இடங்களில் நேற்று நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கடந்த 3 நாட்களில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 332 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது. இருமல் உள்ளிட்ட நோய்களுக்கும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றனர்.