

குடியாத்தம்: குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் வாரந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கட்டிட விரிவாக்கப் பணிகள் காரணமாக சில கட்டிடங்கள் விரைவில் இடிக் கப்பட உள்ளன.
எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள நகராட்சி மேல்நிலை பள்ளியில் இனி வியாழக்கிழமை தோறும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முகாமுக்காக இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும், நேற்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை முகாம் நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர்கள் பாபு, மஞ்சுநாதன், கண், காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர் சதீஷ், கண் மருத்துவர் சுமதி, குழந்தைகள் நல மருத்துவர் இளஞ்செழியன், மனநல மருத்துவர் புகழரசி உள்ளிட்டோர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து சான்று அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக மாலை 4 மணியளவில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன் தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடை யாள அட்டையை வழங்கினார்.
இதற்கிடையில், முகாமுக்கு வந்திருந்தவர்கள் அமருவதற்கு போதிய இருக்கை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், குடிநீருக்காக புதிய பேருந்து நிலையம் அல்லது பாரத ஸ்டேட் வங்கி பகுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பலரும் முகாம் நடைபெற்ற பள்ளி கட்டிடத்துக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருந்தனர்.
சோர்வாக இருந்த சிலர் அங்கேயே உறங்கி ஓய்வெடுத்தனர். முகாமில் பங்கேற்ற பலரும் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்திருந்ததால் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு உடனடியாக ஊர் திரும்ப முடியாமல் இருந்தனர். முகாமில் குறைந்தபட்ச அடிப்படை வசதி களையாவது செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கவலை தெரிவித்தனர்.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட மாற்றுத்தறினாளிகள் நல அலுவலர் சரவணனிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, ‘‘குடியாத்தம் முகாம் இன்று முதல் முறை என்பதால் சரியாக ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை.
ஆட்சியருக்கு அறிக்கை அளித்து அடுத்த வாரம் முதல் நகராட்சி உதவியுடன் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். இன்றைய முகாமில் 52 பேர் பங்கேற்றதில் தகுதியாக 27 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.