

சென்னை: மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடுவாரா என்பது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை நேற்று கூறியதாவது: சென்னை விருகம்பாக்கத்தில் 2 நாட்களுக்கு முன் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்ற நிகழ்ச்சியில், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலரிடம் திமுக இளைஞரணியை சேர்ந்த இருவர் அத்துமீறி நடந்துள்ளனர்.
ஆனால், 2 நாட்களாக அவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை. பாஜக வலியுறுத்தலுக்குப் பிறகுதான் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களைக் கைது செய்துள்ளனர். இந்த தாமதத்துக்கு திமுக அமைச்சர்களின் அழுத்தம் காரணமா என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளிக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இறையூர் கிராமத்தில், ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபனேசர் முன்னிலையில், மாநகராட்சி துப்புரவுப் பணியாளரை வெறும் கைகளால் கழிவுநீரை சுத்தம் செய்யச் செய்துள்ளனர். எனவே, சட்டப்பேரவை உறுப்பினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் பிரிவினையை உண்டாக்கும் தலைவர்களுடன் ராகுல்காந்தி ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இது இந்தியாவைப் பிரிப்பதற்கான யாத்திரையாகும். அவரது பயணத்தை மக்கள் கேலி செய்கின்றனர்.
பாஜகவில் இருந்து யார் விலகினாலும், அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதுதான் எனது வழக்கம். காயத்ரி ரகுராம் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும். பாஜகவை நோக்கி மகளிர் அதிகம் வந்து கொண்டிருக்கின்றனர். ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, அவர் கட்சியை விட்டு விலகினால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது.
ஈஷா யோகா மையம் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக காவல் துறையினர் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும். என்னை பெரிய மனிதர் என்று யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது சுப்ரமணியன் சுவாமிக்கும் பொருந்தும். நாங்கள் தமிழக மக்களிடம் நேரடியாக அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.
2022-2023-ல் தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.2.62 லட்சம் கடன் சுமை உள்ளது. இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
மக்கள் ஐ.டி. என்று தமிழக அரசு புதிதாக ஒன்றைக் கொண்டுவர முயற்சிக்கிறது. ஆதார் செய்யாத வேலையை இது செய்யப்போகிறதா 99.5 சதவீதம் மக்களிடம் ஆதார் உள்ளது. பல்வேறு திட்டங்கள் ஆதார் மூலம் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மக்கள் ஐடி மூலம் தமிழக அரசு புதிதாக என்ன செய்யப்போகிறது?
தமிழகத்தில் மட்டும்தான் வாரிசு அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பாஜக, அதிமுக, பாமக கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
கடும் வாக்குவாதம்: செய்தியாளர் சந்திப்பின்போது, ரபேல் வாட்ச் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, தனது வாட்சை பத்திரிகையாளரிடம் கழற்றிக் கொடுத்து, சோதனை செய்துகொள்ளுமாறு அண்ணாமலை கூறினார். அப்போது, சில பத்திரிகையாளர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.