Published : 05 Jan 2023 06:26 AM
Last Updated : 05 Jan 2023 06:26 AM
சென்னை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான கிளைகளுடன் செயல்படும் புரொபஷனல் கூரியர் நிறுவனம், வருமானத்தைக் குறைத்துக் காட்டி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதனடிப்படையில், வருமான வரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை முதல் சென்னை மண்ணடி, நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட 6 இடங்களில் செயல்படும் புரொபஷனல் கூரியர் நிறுவன அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பல முக்கிய ஆவணங்கள் மற்றும் நகை, பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நிறுவனத்தின் வரவு- செலவு தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முழு விசாரணையும் முடிவடைந்த பின்னர், அனைத்து தகவல்களும் வெளியிடப்படும்” என்றனர்.
கூரியர் நிறுவனங்களில், கரோனா காலத்தில் அதிக அளவில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கூரியர் நிறுவனங்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்தலும் நிகழ்ந்ததாகப் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அண்மையில் அனைத்து கூரியர் நிறுவன உரிமையாளர்கள், நிர்வாகிகளை அழைத்து, ஆலோசனை நடத்தினார். எனவே, புரொபஷனல் கூரியர் நிறுவனம் மூலம் போதைப் பொருட்கள் அல்லது சட்டவிரோதப் பொருட்கள் கடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT