Published : 05 Jan 2023 04:13 AM
Last Updated : 05 Jan 2023 04:13 AM
கிருஷ்ணகிரி: ஆட் குறைப்பு நடவடிக்கையை கைவிடக் கோரி கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் முன்பு அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, மாற்றுப் பணி வழங்கப்படும் என ஆணையர் உறுதியளித்தார்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை முதலாவது கிராஸ் மற்றும் காந்தி சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் தலா 12 பேர் வீதம் 24 பேர் பணிபுரிகின்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டு மே 24-ம் தேதி முதல் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உணவகத்தில் ஆட்குறைப்பு செய்யப்படுவதாகக் கூறி, கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் முன்பு உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: நாங்கள் தினசரி காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை பணிபுரிந்து வருகிறோம். கரோனா காலத்தில் காலை முதல் இரவு வரை பணிபுரிந்தோம். எங்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கவில்லை.
திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகத்தை மூடவோ, ஊழியர்களை இடைநிறுத்தமோ செய்ய மாட்டோம் என உறுதியளித்த நிலையில், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர், “ ஒரு உணவகத்துக்கு 6 பேர் மட்டுமே பணிபுரிய வேண்டும். மற்றவர்கள் பணியில் இருந்து விலகி விடுங்கள்” எனக் கூறுகிறார். எங்களது வருகை பதிவேட்டில் கையெழுத்தும் வாங்கவில்லை.
இது தொடர்பாக நகராட்சித் தலைவர் பரிதா நவாபிடம் புகார் அளித்துள்ளோம். எங்களை பணியில் இருந்து நீக்கக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து ஊழியர்கள் மனு அளித்துவிட்டு, அங்கேயே நீண்ட நேரம் காத்திருந்த பின்னர் கலைந்து சென்றனர்.
செலவை குறைக்க நடவடிக்கை: இது தொடர்பாக நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் கூறும்போது, “அம்மா உணவகங்களின் செலவினத்தைக் குறைக்க ஆட்களைக் குறைத்து வருகிறோம். அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க ஏற்பாடு செய்து தருகிறோம். ஆனால், அவர்கள் என்னிடம் இதுகுறித்து கூறவில்லை. எழுத்துப் பூர்வமாக மனு அளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க ஏற்பாடு செய்து தரப்படும்” என்றார். தினசரி காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை பணிபுரிந்து வருகிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT