

சென்னை: கரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 350-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய (எம்ஆர்பி) கரோனா ஒப்பந்த செவிலியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் உதயகுமார் கூறியதாவது:
கரோனா பேரிடரின் போது, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிக முறையில் ஒப்பந்த செவிலியர்களாக நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த காலத்துக்குப் பின்னர், அவர்களில் 3 ஆயிரம் பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். மீதமுள்ளவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதுகுறித்து நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.
ஒப்பந்த செவிலியர் நியமனம், பணி நிரந்தர நடவடிக்கைகளில் கடந்த ஆட்சிக் காலத்தில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதன்காரணமாகவே 3 ஆயிரம் பேருக்குபணி பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த காரணத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.ஆட்சி நிர்வாகத்தில் உள்ளவர்கள், அவர்களுக்குக் கீழ் உள்ள துறையில் நடைபெற்ற முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எங்களை பழிவாங்குவது எப்படி நியாயமாகும். அதேபோல் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் எங்களுக்கு பணி வழங்குவதும் ஏற்புடையதல்ல.
எனவே, எங்களுக்கும் நிரந்தரப் பணியிடம் வழங்கக் கோரி எம்ஆர்பி அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டோம். அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.