சென்னை | மொபெட் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து: 2 கால்களும் துண்டான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

நித்யா
நித்யா
Updated on
1 min read

சென்னை: வானகரம் அருகே மொபெட் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், இரு கால்கள் துண்டாகி சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சென்னையை அடுத்த மாங்காடு, அம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் நித்யா (27). இவரது தோழி பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த ரோகினி (24). தோழிகளான இருவரும் அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலை முடிந்து இருவரும் ஒரே மொபெட்டில் அம்பத்தூரிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

நித்யா மொபெட்டை ஓட்ட, ரோகினி பின்னால் அமர்ந்திருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் அடுத்த வானகரம் சிக்னல் அருகே வந்தபோது பின்னால் அதி வேகமாக வந்தகன்டெய்னர் லாரி, மொபெட் மீது மோதியது. இதில் கீழேவிழுந்தவர்கள் மீது கன்டெய்னர் லாரி ஏறி இறங்கியதில் நித்யாவின் கால்கள் இரண்டும் சிதைந்தன. ரோகினியின் ஒரு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த பெண்கள் இருவரும் வலியால் துடித்தனர்.

இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம், பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் பொதுமக்கள் உதவியுடன், காயமடைந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கன்டெய்னர் லாரி ஏறி இறங்கியதால் நித்யாவின் இரு கால்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. மேலும் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நித்யாவின் இரு கால்களும் அகற்றப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். ரோகினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுநர் மோகன் (32) கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in