

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வங்கிகள், பேருந்துகள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொதுமக்கள் தயக்கமில்லாமல் ரூ.10 நாணயங்களைப் பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அரசின் உத்தரவுப்படி இந்திய ரிசர்வ் வங்கி ரூ.10 நாணயங்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறது. இந்த ரூ.10 நாணயங்கள் செல்லுமா? என்ற சந்தேகம், அவ்வப்போது திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் எழுப்பப்படுகிறது.
இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் ரூ.10 நாணயங்களைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுவதாகவும், தனிநபர் மற்றும் கடை உரிமையாளர்கள் சிலர் ரூ.10 நாணயங்களை வாங்க மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூ.10 நாணயங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லத்தக்கவையாகும். ரூபாய் நோட்டுகளை விட நாணயங்கள் நீண்ட நாட்களுக்குப் புழக்கத்தில் இருக்கும் என்பதால் இந்திய ரிசர்வ் வங்கி இதுவரையில் 14 வெவ்வேறு விதமான உருவப்படங்களுடன் ரூ.10 நாணயங்களை வெளியிட்டுள்ளது.
ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் ரூ.10 நாணயங்கள் குறித்து சந்தேகப்படத் தேவையில்லை. வங்கிகள், பேருந்துகள், அனைத்து வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் தயக்கமில்லாமல் ரூ.10 நாணயங்களைப் பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.