

சென்னை: நீண்ட நெடிய வரலாறு கொண்ட சென்னை மாநகராட்சியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கொசுத் தொல்லை தீர்க்க முடியாத பிரச்சினையாகவே நீடிக்கிறது. ஆனால், கொசு ஒழிப்பு பணிக்காக மாதம் ரூ.1.5 கோடி செலவு கணக்கை மட்டும் மாநகராட்சி நிர்வாகம் காட்டத் தவறுவதில்லை.
கொசுக்களை புழுவாக இருக்கும் போதே அழிக்க மருந்துகள், கால்வாய்களில் மருந்து தெளிக்கபடகுகள், மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் வாங்கப்படுகின்றன. கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்க வாரந்தோறும் வீடு வீடாகச் சென்று பணியாளர்கள் ஆய்வு செய்கின்றனர். இவற்றை மீறி வாழும் முதிர் கொசுக்களை அழிக்க 304 புகை பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வளவு செய்தும்கொசுக்கள் ஒழியவில்லை.
மாநகராட்சி நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததன் காரணமாகவே கொசுக்கள் ஒழியவில்லை என அனுபவம் வாய்ந்த பூச்சியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது:
கொசுத் தொல்லை புகார் வந்தால், அப்பகுதியில் இருப்பது நல்ல நீரில் வளரும், காலை அல்லது பகலில் வெளிவரும் ஏடிஸ் கொசுவா, கெட்ட நீரில் வளரும், மாலை நேரத்தில் வெளிவரும் கியூலெக்ஸ் கொசுவா எனக் கண்டறிய வேண்டும். அதன் பின்னர் அவற்றின் வளரிடங்களை கண்டறிந்து அழிக்க வேண்டும். கடைசி வாய்ப்பாகவே புகை பரப்ப வேண்டும். இதைத்தான் உலக சுகாதார நிறுவனம், மத்திய, மாநில பொது சுகாதாரத் துறைகள் அறிவுறுத்துகின்றன.
நகர வாழ்க்கையில் குறிப்பாக வட சென்னையில் காற்று மாசுவால் சுவாச பிரச்சினைகளுடன் வாழ்வோர் அதிகரித்து வருகின்றனர். இவர்களுக்கு கொசு புகை பரப்புவது கடும் சிரமத்தை ஏற்படுத்தும்.
பல்வேறு உயிரினங்களைப் போலவே கொசுக்களும் எதிர்ப்புத் திறன் பெற்றிருக்கின்றன. அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயித்த அளவிலேயே மருந்தைக் கலந்து புகை பரப்புவதால் பலனில்லை. வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாவிட்டால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கொசுக்கள் ஒழியாது.
இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பொது சுகாதாரத் துறை தலையிட்டு, இலங்கையைப் போல புகை பரப்பாமல் கொசு ஒழிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும். நீர்நிலைகளில் கொசுப் புழுக்களை உண்ணும் டிப்லோனிகஸ் இன்டிகஸ் (Dipllonychus Indicus) போன்ற பூச்சி இனங்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொசு ஒழிப்பில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதது குறித்து மேயர் ஆர்.பிரியாவிடம் கேட்டபோது, ``நான் மாநகரின் மேயர். துறைகளின் பணிகள் குறித்து எனக்குத் தெரியும். மன்றகூட்டத்தில் என்னுடன் ஆணையரும் அமர்ந்திருக்கிறார். அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. இருவரும் சேர்ந்துதான் அறிவிக்கிறோம். எங்களுக்கு யாரும் வேலை செய்ய சொல்லித்தர தேவையில்லை'' என்றார். மாநில பொது சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``கொசு ஒழிப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, மாநகராட்சி நிர்வாகத்துக்குத் தெரிவிக்கப்படும்'' என்றனர்.