

பணமதிப்பை நீக்கம் செய்து மத்திய அரசு அறிவித்த பிறகு, வங்கிகளில் கடும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல அலுவலகங்களுக்கு நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் வங்கிகள், ஏடிஎம்களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குறைந்த அளவிலான ஏடிஎம்கள் மட்டுமே இயங்குவதால், பணம் இருக்கும் ஏடிஎம்களில் மக்கள் பலமணி நேரம் வரை காத்திருந்தனர். வங்கிகளிலும் கூட்டம் அலைமோதியது.
புரசைவாக்கத்தில் உள்ள பொதுத்துறை வங்கிக்கு பணம் எடுக்க வந்த கவிதா என்பவர் கூறும்போது, ‘‘நான் வேலைக்குப் போவதால் வார நாட்களில் வங்கிக்கு வர முடியவில்லை. இன்று அலுவலகம் விடுமுறை என்பதால் பணம் எடுக்க வந்தேன். ஆனால், அதிகபட்சமாக ரூ.4,000 வரை மட்டுமே தருகின்றனர். அதை வாங்க 4 மணி நேரம் வரிசையில் நின்றேன்’’ என்றார்.