Published : 05 Jan 2023 04:17 AM
Last Updated : 05 Jan 2023 04:17 AM

ஓடுபாதை விரிவாக்க திட்ட சாலை அமைப்பதில் திடீர் மாற்றம்? - வாகனங்கள் 15 கி.மீ. சுற்றிச் செல்லும் சூழல் உருவாகும் நிலை

மதுரை: மதுரை விமான நிலைய ஓடு பாதை விரிவாக்கத்துக்காக புதிய சுற்றுச்சாலையை கிழக்கு திசையில் அமைக்க ஆலோசனை நடந்து வருகிறது. மேற்குத் திசையில் அமையும் திட்டத்துக்கு மாற்றாக அமைந்தால் 15 கி.மீ. வரை சுற்றி பயணித்துதான் விமான நிலையம் செல்ல வேண்டிய நிலை உருவாகும். இதனால், திட்டத்தின் நோக்கம் நிறைவேறாது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பணி நடக்கிறது. விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு 15 கி.மீ. சுற்றுச்சுவர் கட்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதனால், தற்போதுள்ள உத்தங்குடி-கப்பலூர் இடையேயான சுற்றுச் சாலையில் உடனே மாற்றம் செய்யஏற்பாடு நடக்கிறது.

இதில் புதிய சாலை விமான நிலையத்தின் மேற்குப் பகுதியில் அமைத்தால் சுற்றுச்சாலையின் நீளமும் குறையும், விமான நிலையத்துக்கும் எளிதாக வாகனங்கள் சென்றுவர முடியும். எய்ம்ஸ் மருத்துவ மனைக்கும் 8 கி.மீ. தூரத்தில் செல்லலாம் எனக் கருதப்பட்டது. இந்தத் திட்டம் அரசின் பரிசீலனையில் இருந்த நிலையில், தற்போது திடீர் மாற்றமாக கிழக்கு திசையில் புதிய பாதையில் திட்டத்தை நிறைவேற்ற ஆய்வு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி அமைந்தால் இப்பகுதியில் அமையும் சாலையைப் பெரும்பாலான வாகனங்கள் புறக்கணிக்கும் சூழல் உருவாகும் என்ற கருத்து வெளியாகியுள்ளது.

இது குறித்து ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் சிவசாமி, பெருங்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தங்கவேலு ஆகியோர் கூறியது: விமானநிலைய ஓடுபாதையை நீட்டிக்க புதிய புறவழிச்சாலை அமைக்க 2010-ம் ஆண்டில் அரசு, மாநகராட்சியுடன் இணைந்து திட்டமிட்டது. இதன்படி மண்டேலா நகர், பெருங்குடி எஸ்என்.கல்லூரி, ஆலமரம் பாட்டில் கம்பெனி வழியாக தற்போதுள்ள சுற்றுச் சாலையில் பரம்புப்பட்டி அருகே இணையும்.

அளவீடு செய்து தயார் நிலையில் உள்ள நிலத்தை கையகப்படுத்தி, இழப்பீடு தர வேண்டியது மட்டுமே அரசின் பணி. புறவழிச்சாலையை விரைந்து அமைப்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர், மாவட்ட நிர்வாகத்துடன் கடந்த செப்.12, நவ.11 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்தினார். இதில் திடீர் மாற்றமாக விமான நிலையத் தின் கிழக்குப் பகுதியில் சுற்றுச் சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மார்க்கமாக செல்லும் வாகனங்களை மட்டும்கணக்கில் கொண்டு இந்த மாற்றத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். திருமங்கலம், ராஜபாளையம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் குறித்தோ, விமானநிலையத்துக்குச் செல்லும் வாகனங்கள் குறித்தோ ஆய்வில் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

தற்போது சுற்றுச்சாலையில் உள்ள அமிக்கா ஹோட்டலிலிருந்து பிரியும் சாலை கூடல்செங்குளம், பாப்பானோடை, ராமன்குளம், குசவன்குண்டு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சேர்மத்தாய் வாசன் கல்லூரி வரை சென்று மீண்டும் தற்போது கருப்பணசுவாமி கோயில் அருகே அருப்புக் கோட்டை சாலை பிரியும் இடத்தில் இணையும் வகையில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான ஓடுபாதைக்காக மட்டுமின்றி, ராணுவப் பயன்பாட்டுக்காக தனியாக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தையும் கடந்தே சுற்றுச்சாலை அமைக்கப்பட வேண்டியுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள புதிய சுற்றுச் சாலையின் தூரம் மட்டும் 12 கி.மீ. தற் போதுள்ள சாலையைவிட 6.5 கி.மீ. அதிகம். விமான நிலையத்தின் மேற்குப்பகுதியில் புதிய சாலை அமைத்தால், அமிக்கா ஹோட்டல் முதல் பரம்புப்பட்டிக்கு 9.4 கி.மீ. மட்டுமே.

கிழக்குப் பகுதியில் சாலை அமைந்தால் 14.2 கி.மீ. அருப்புக்கோட்டை பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் விமான நிலையம் செல்ல கருப்பணசாமி கோயிலிலிருந்து சேர்மத்தாய் வாசன் கல்லூரி, அமிக்கா ஹோட்டல், மண்டேலா நகர், பெருங்குடி வழியாக 19.2 கிமீ செல்ல வேண்டும். தற்போதுள்ள தூரத்தை விட 13 கிமீ அதிகம். கிழக்குப் பகுதியில் சாலை அமைந்தால் 7.4 கி.மீ. தூரத்தில் விமான நிலையம் செல்லலாம். தற்போதுள்ள தூரத்தைவிட 1.5 கி.மீ. மட்டுமே அதிகம்.

மேற்குப் பகுதியில் சாலை அமைந்தால் திருமங்கலம், கப்பலூர் வழியாக வரும் வாகனங்கள் விமான நிலையம் செல்ல 5.6 கி.மீ.மட்டுமே ஆகும். கிழக்குப் பகுதியில் சாலை அமைந்தால் திருமங்கலம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் சேர்மத்தாய் வாசன் கல்லூரி, அமிக்கா ஹோட்டல் வரை சென்று, மீண்டும் மண்டேலா நகர் திரும்பி, பெருங்குடி வழியாக விமான நிலையத்துக்கு 21.4 கி.மீ. பயணிக்க வேண்டும்.

அருப்புக்கோட்டை மார்க்கமாக இரு வழியிலும் செல்லும் வாகனங்கள் மட்டுமே வேறு வழியின்றி ஒவ்வொரு முறையும் கூடுதலாக 6.5 கி.மீ. பயணிக்கும். இதைத்தவிர விமான நிலையம் செல்லவோ, திருமங்கலம் மார்க் கமாக செல்லவோ கிழக்கு திசையில் அமையும் சாலையைப் பயன்படுத்தவே முடியாத சூழல் ஏற்படும்.

இதனால் இந்தப் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் சுற்றுச்சாலையில் பயணிப்பதையும், இந்த வழியாக விமான நிலையம் செல்வதையும் 90 சதவீதம் புறக்கணிக்கும் சூழல்உருவாகிவிடும். இது சுற்றுச்சாலை அமைந்ததன் நோக்கத்தையே சிதைத்துவிடும். இதுபோன்ற விஷயங்களை உரிய அலுவலர்கள் முழுமையாக ஆய்வு செய்து சரியான பாதையில் புதிய சாலையை அமைத்தால்தான் திட்டத்தின் நோக்கம் வெற்றி பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x