ரூபாய் நோட்டு பிரச்சினையை சித்தரிக்கும் கிறிஸ்துமஸ் குடில்: ஓவிய ஆசிரியரின் கைவண்ணம்

ரூபாய் நோட்டு பிரச்சினையை சித்தரிக்கும் கிறிஸ்துமஸ் குடில்: ஓவிய ஆசிரியரின் கைவண்ணம்
Updated on
1 min read

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சித்தரிக்கும் வகையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார்.

தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் என்.இசிதோர் பர்னாந்து (52). இவர் தனது வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் குடிலுடன், சமூகச் சிந்தனைகளை தூண்டும் விதவிதமாக ஓவியங்களை வரைந்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மதநல்லிணக்கம், உலக சமதானம், இலங்கை தமிழர் பிரச்சினை, தேசிய ஒருமைப்பாடு என பல கருத்துக்களை மையமாக வைத்து குடில் அமைத்துள்ளார். கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை மையப்படுத்தி இவர் அமைத்திருந்த கிறிஸ்துமஸ் குடில் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

ரூபாய் நோட்டு விவகாரம்

நடப்பாண்டு மக்களை வெகுவாக பாதித்துள்ள ரூபாய் நோட்டு விவகாரத்தை சித்தரித்து கிறிஸ்துமஸ் குடிலை இசிதோர் பர்னாந்து வடிவமைத்துள்ளார். சிறிய குடிலை மத்தியில் வைத்து, அதனைச் சுற்றி புதிய ரூ. 2,000, ரூ. 500 நோட்டுகளின் நகல்கள், ஏடிஎம் மையங்கள் முன்பு பணத்துக்காக மக்கள் காத்திருக்கும் காட்சி, பணம் இல்லாததால் ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் இருக்கும் காட்சி போன்றவற்றை தத்ரூபமாக சித்தரித்து வைத்துள்ளார்.

மேலும், ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளிவந்த புகைப்படங்களையும் கிறிஸ்துமஸ் குடில் பின்னணியில் ஒட்டி வைத்துள்ளார். குடிலின் மேல் பகுதியில் இந்த ஆண்டில் புனிதர் பட்டம் பெற்ற அன்னை தெரசா புகைப்படத்தை வைத்துள்ளார்.

இந்த வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடிலை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in