Published : 21 Jul 2014 02:31 PM
Last Updated : 21 Jul 2014 02:31 PM

மணல் கொள்ளையை தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மணல் கொள்ளையை தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கையில் கூறியிருப்பதாவது: "வேலூர் மாவட்டத்தில் ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற தலைமைக்காவலர் கனகராஜை மணல் கொள்ளையர்கள் டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழகத்தின் ஆறுகள் அனைத்திலும் மணலை ஒட்டச் சுரண்டுவதை அதிமுக அரசும் முந்தைய திமுக அரசாங்கமும் கொள்கை நிலைபாடு போலவே தீவிரமாக கடைபிடித்து வருகின்றன.

கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை, மணல் கொள்ளை எதுவானாலும் உடனடி பரபரப்புகளின் போது அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது போல காட்டிக் கொள்வதும், அதன் பின்னர் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததும் வழக்கமாக இருந்து வருகிறது.

உண்மையில் மணல் கொள்ளை ஆளும் கட்சியின் உயர்மட்டத்தில் உள்ளோர் ஆதரவின்றி இவ்வளவு தூரம் நடப்பதற்கு வாய்ப்பில்லை. அதிகாரபூர்வமாக ஆற்று மணல் கொள்ளைக்கு சிலருக்கு உரிமம் தரப்பட்டுள்ளது.

அவர்கள் யாரும் விதிமுறைகளை சுற்றுச் சூழல் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுவதில்லை. மணல் கொள்ளையர்கள் பல இடங்களில் மாவட்ட அதிகாரிகளை விட பலம் படைத்தவர்களாகி இணை நிர்வாகத்தை நடத்துபவர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.

மணல் கொள்ளையை கண்டிக்கும், எதிர்த்துப் போராடும் அரசு அதிகாரிகள், தனிநபர்கள், இயக்கங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். பல இடங்களில் மணல் கொள்ளைக்கு எதிரானவர்கள் கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள். சில இடங்களில் மணல் கொள்ளையை தடுக்க முயலும் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் விரட்டப்படுவதும், கொலை செய்வதும் நின்றபாடில்லை.

தமிழக அரசு இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் அளிப்பதோடு தனது கடமை முடிந்துவிட்டது என நினைப்பது சரியல்ல. ஏற்கனவே சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருக்கும் நிலையில், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கொல்லப்படுவது மக்கள் மத்தியில் பீதி உணர்வை உருவாக்கும். தற்போது வேலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற தலைமைக் காவலர் கனகராஜ் டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசு தலைமைக் காவலர் கனகராஜ் கொலையில் சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்.

இதற்கு முந்தைய தாக்குதல்கள் மற்றும் கொலைககள் சம்மந்தப்பட்டவர்கள் மீதான சட்ட நடவடிக்கையை துரிதப்படுத்தவும், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கும் மாநில அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x