

'போஸ்ட்' என்ற குரல் வரும் திசையைப் பார்ப்பதற்குள் அங்கிருந்து அகன்றிருப்பார் தபால்காரர். ஆனால், நீலகிரியின் மலை கிராம மக்களோ சிவன் எங்கள் ஊர் தபால்காரர் அல்ல சிறந்த மனிதநேயர் என சிலாகிக்கின்றனர்.
நீலகிரியின் மலைப்பாங்கான பகுதிகளில் தினமும் 15 கி.மீ. நடந்தே பயணித்து அங்குள்ள மக்களுக்குக் கடிதங்களை வழங்கி வருகிறார் தபால்காரர் சிவன்.
சிங்காரா மற்றும் மரப்பாலம் பகுதிகளின் வழியாகப் பயணிக்கும் தபால்காரர் சிவனுக்கு வயது 62.
பயணங்களில் அவரைக் காட்டு யானைகள் துரத்தியிருக்கின்றன. கரடிகள், காட்டெருமைகள் கடந்து சென்றிருக்கின்றன. பாம்புகள் பாதையில் ஊர்ந்திருக்கின்றன. ஓடைகள் குறுக்கிட்டிருக்கின்றன. பாதைகள் தடம் மாறியிருக்கின்றன. ஆனாலும் அசராமல் பல வருடங்களாக நடந்து சென்றே கடிதங்களை வழங்கி வருகிறார் சிவன்.
பெரும்பாலும் நீலகிரி ரயில் பாதை ஓரமாகவே நடக்கும் அவர், குன்னூர் தபால் நிலையத்தின் அருகில் தன்னுடைய மலையேற்றத்தைத் தொடங்குகிறார். பர்லியாறு, மரப்பாலம் ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலை மற்றும் மிளகுத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வரும் கடிதங்கள், ஓய்வூதியங்களை நேரில் சென்று வழங்குகிறார்.
எண்ணிக்கை குறைந்தது
தன்னுடைய பணி குறித்துச் சொல்லும் சிவன், தன்னுடைய வருடக்கணக்கான அனுபவத்தில் ஏராளமான சுரங்கங்களைக் கடந்திருக்கிறார். விலங்குகளின் கூட்டங்களைக் கண்டிருக்கிறார்.
கடந்த ஆறு வருடங்களில் மக்களுக்கு வரும் கடிதங்கள், ஆவணங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதாகச் சொல்கிறார். பர்லியாறு மற்றும் மரப்பாலத்துக்கு அருகில் வசிப்பவர்களுக்கு தற்போது வாரம் 3 கடிதங்கள் வருவதாகக் கூறியவர், மூன்று வருடங்களுக்கு முன்பு கூட வாரத்துக்கு 10 முதல் 15 கடிதங்களை வழங்கி வந்ததாகக் கூறுகிறார்.
தொழில்நுட்ப வளர்ச்சியாலும், பெரும்பாலானோர் குன்னூர் அல்லது மேட்டுப்பாளையத்துக்கு குடிபெயர்ந்துவிட்டதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்கிறார் சிவன்.
எதையும் பெற்றதில்லை
குன்னூர்- படுகர் தோட்டத்தைச் சேர்ந்த சகாதேவன், தபால்காரர் சிவன் குறித்துப் பேசும்போது ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தார். ''இங்கே ஓய்வூதியப் பணத்தைப் பெற்றுக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் கோவைக்குச் சென்றுவிட்டார். அங்கே அவருக்கு உடல்நிலை மோசமடைய, சிகிச்சைக்கு உடனடியாகப் பணம் தேவைப்பட்டது. இதையறிந்த சிவன், தன் சொந்த செலவில் கோவை சென்று அவரிடம் பணத்தைக் கொடுத்தார். அத்தோடு நில்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தார்.
மிகுந்த சிரமங்களுக்கு இடையிலும், கடுங்குளிரிலும் பயணிக்கும் அவரைப் பார்க்கும்போதெல்லாம் தேநீர் அருந்த அழைப்போம். ஆனால் அன்பாக மறுத்துவிடுவார். எங்களிடம் இருந்து அவர் எதையுமே பெற்றதில்லை'' என்கிறார் சகாதேவன்.
''நான் ஓய்வு பெற இன்னும் 3 வருடங்கள் இருக்கின்றன. மக்களைச் சந்தித்து கடிதங்களை வழங்குவதும், உதவுவதும் எனக்குப் பிடித்தமான விஷயங்கள். அதை எப்பொழுதும் செய்வேன்'', புன்னகைத்தவாறே விட்ட நடைப்பயணத்தைத் தொடர்கிறார் சிவன்.