Published : 04 Jan 2023 05:04 PM
Last Updated : 04 Jan 2023 05:04 PM

தி.மலை - அண்ணாமலையை ட்ரோன் கேமராவில் படம்பிடித்த ரஷ்ய இளைஞர்: காட்சிகளை அழித்து வனத் துறையினர் எச்சரிக்கை

மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலையை தடை உத்தரவை மீறி ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த செர்ஜியிடம் விசாரணை நடத்திய திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் ஸ்ரீநிவாசன்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தடை உத்தரவை மீறி மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலையை ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளைஞரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

மலையே மகேசன் என போற்றப்படுகிறது, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை. கார்த்திகைத் தீபத் திருநாளன்று 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலை மீது ஏறவும் மற்றும் படம் பிடிக்கவும் வனத்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில், அண்ணாமலையில் உள்ள கந்தாஸரமம் அருகே ட்ரோன் கேமரா மூலம் வெளிநாட்டினர் படம் பிடித்து கொண்டிருப்பதாக வனத்துறைக்கு இன்று (4-ம் தேதி) காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரக அலுவலர் ஸ்ரீநிவாசன் தலைமையிலான வனத்துறையினர், கந்தாஸரமம் அருகே விரைந்து சென்றனர். அப்போது ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 பேர், அண்ணாமலையை ட்ரோன் மூலமாக படம் பிடித்து கொண்டிந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த செர்ஜி கோலோஷேகே (34) என்பவர், தனது ட்ரோன் கேமரா மூலமான படம் பிடித்ததாகவும், மற்ற 2 பேர் வேடிக்கை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்து திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து வந்து செர்ஜியிடம் வனச்சரக அலுவலர் ஸ்ரீநிவாசன் விசாரணை நடத்தினார். அப்போது அவர், திருவண்ணாமலைக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு வந்ததாகவும், அண்ணாமலையின் இயற்கை அழகை படம் பிடித்ததாகவும், படம் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து தெரியாது, படம் பிடித்த காட்சிகளை அழித்து விடுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, ட்ரோன் கேமராவில் பிடிக்கப்பட்ட படக் காட்சிகளை வனத்துறையினர் அழித்தனர். மேலும் அவரது பாஸ்போர்ட், விசா ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பின்னர், அவரிடம் ட்ரோன் கேமராவை ஒப்படைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x