

சென்னை: இனியும் உயிர்ப்பலி கூடாது, சென்னை மாநகர சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''சென்னை மதுரவாயல் அருகே புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் தடுமாறி விழுந்த ஷோபனா என்ற மென்பொறியாளர் மீது சரக்குந்து ஏறி நசுங்கி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.
விபத்து நடந்த சாலையின் பராமரிப்பு எந்தத் துறையின் பொறுப்பு? என்பது குறித்த சர்ச்சையில் நீண்டகாலமாக பராமரிக்கப்படவில்லை என்றும், கடந்த 2020-ஆம் ஆண்டு அங்கு நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அரசுத் துறைகளின் அலட்சியம் உயிர்களை பலிவாங்கக்கூடாது.
சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவற்றாலும், பருவமழை காரணமாகவும் சென்னையில் பெரும்பான்மையான சாலைகள் பயணிக்க முடியாத அளவுக்கு மோசமாக சேதமடைந்துள்ளன. அவை இன்னும் சீரமைக்கப்படவில்லை.
சென்னையில் சேதமடைந்த சாலைகளால் இனி ஓர் உயிர் கூட பறிபோகக்கூடாது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க தமிழக அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.