"சென்னை சங்கமம் மக்கள் திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள்" - முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை சங்கமம் மக்கள் திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

"சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது, "அனைவருக்கும் அன்பு வணக்கம். தனித்த அடையாளத்தோடு கலை, பண்பாடு, இலக்கியம் என வாழ்ந்திட்ட தமிழர், பின்னாளில் இனப் பகைவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகி தங்களது அடையாளங்களை மறந்தனர். மறத்தமிழரின் மான உணர்வை பகுத்தறிவால் மீட்டெடுத்து, இன எழுச்சி பெற வைத்தது திராவிட இயக்கம். தமிழரின் பண்பாட்டை மீட்டெடுக்கும் திராவிட சிந்தனையின் மற்றுமொரு முன்னெடுப்புதான் ‘சென்னை சங்கமம்’.

தலைவர் கருணாநிதி ஏற்றி வைத்த கலை பண்பாட்டுச் சுடரை அணையாது காத்திடும் விதத்தில் தற்போது “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பல்வேறு இடங்களில் வரும் ஜனவரி 13 ஆம் நாள் தொடங்கி 17ஆம் நாள் வரையில் அரசு சார்பில் நடைபெறவிருக்கிறது.

வரும் ஜனவரி 13, வெள்ளிக்கிழமையன்று, சென்னை, தீவுத் திடலில் “சென்னை சங்கமம்-2023” நிகழ்வை நான் தொடங்கி வைக்கிறேன். 16 இடங்கள், 60-க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள், 600-க்கும் மேற்பட்ட மண்ணின் கலைஞர்களை ஒன்றிணைத்து, மீண்டும் வருகிறது “சென்னை சங்கமம்”. பறையாட்டம், கரகாட்டம், மலைவாழ் மக்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட நம் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன.

இதோடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனிச் சிறப்பான உணவு வகைகள் உணவுத் திருவிழாவில் இடம்பெறுகின்றன. இலக்கியத் திருவிழாவும் நடைபெற உள்ளது. நம் தமிழ் மண்ணையும், மக்களையும், மக்களின் கதைகளையும் பேசும் இந்தக் கலைகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு பெருமிதம் கொள்கிறது. ‘தமிழர் என்று ஓர் இனம் உண்டு, தனியே அவருக்கு ஒரு குணமுண்டு’. ‘கலைகள் யாவிலும் வல்லவனாம், கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்’. இந்த மாபெரும் மக்கள் திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள்! வாருங்கள்! நம்ம ஊரு திருவிழாவில் சந்திப்போம்." இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in