

தருமபுரியில் குடும்பத் தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியை அடுத்த செட்டிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(39). வர்ணம் பூசும் தொழிலாளி. அவ்வப்போது கார் ஓட்டுநராகவும் பணிக்கு செல்வது வழக்கம். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஆதீஸ்வர்(8), சவிதா(5) என 2 குழந்தைகள் இருந்தனர்.
இவர்கள் குடும்பத்துடன் தருமபுரி வெண்ணாம்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தனர். சமீப காலமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை நாகராஜின் தாய் ராஜம்மாள் மகன், மருமகள், பேரக் குழந்தைகளைப் பார்க்க மகன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் உட்புறம் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. பலமுறை அழைத்தும் யாரும் திறக்காததால் அப்பகுதியினர் உதவியுடன் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது குழந்தைகள் இருவரும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர். நாகராஜ், நதியா ஆகியோர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.
தகவல் அறிந்த தருமபுரி டிஎஸ்பி சோமசுந்தரம் மற்றும் போலீஸார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். குடும்பத் தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.