

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் நிகழ்த்தும் உரையில் இடம் பெறும் அரசின் கருத்துகள், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம், வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். இந்த முறை, அவர் தமிழில் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மரபுப்படி, ஆளுநர் உரையில் இடம் பெறும் கருத்துகள், திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இதில் ஆளுநர் உரையில் இடம்பெறும் கருத்துகள், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதவிர, பேரவையில் விவாதத்தின்போது, பரந்தூர் விமான நிலையம், சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பலாம் என்பதால், அதை எதிர்கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. அமைச்சரான பிறகு உதயநிதி பங்கேற்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.