

சென்னை: பாஜகவில் இருந்து விலகுவதாக அண்மையில் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். தமிழக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளராக இருந்த சூர்யா சிவா, கட்சியின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரண் இடையேயான சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
விவகாரம் தொடர்பாகவும் தன்னை காசி தமிழ் சங்கமத்துக்கு அழைக்கப்படாதது குறித்தும் கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்து ட்விட்டரில்பதிவிட்டிருந்தார். இதையடுத்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறி, காயத்ரி ரகுராமை 6 மாதம் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக கட்சியின் தலைவர் அண்ணாமலை கடந்த நவம்பரில் அறிவித்தார்.
இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மிகுந்த மனவேதனையுடன் தமிழக பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்திருக்கிறேன். எனது புகார் தொடர்பாக ஒரு விசாரணை நடத்தக்கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சம உரிமை கிடையாது. பெண்களுக்கு மரியாதையும் இல்லை. அண்ணாமலை தலைமையின்கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை யாருமே கண்டு கொள்ளவில்லை. உண்மையான தொண்டர்கள் அண்ணாமலையால் விரட்டியடிக்கப்படுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
நான் இந்த முடிவு எடுப்பதற்கு அண்ணாமலைதான் காரணம். இனி அவரைப் பற்றி பேசப் போவதில்லை. ஏனெனில், அவர் தரம்தாழ்ந்த தந்திரக்காரர். தமிழகபாஜகவில் பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.மரியாதை இல்லாத இடத்தில் இருக்க வேண்டாம். அண்ணாமலை மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். எனக்கு எதிராக செயல்பட்டுவரும் வார் ரூம் பற்றியும் புகார் அளிப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அச்சமாக இருக்கிறது: பாஜகவில் இருந்து விலகுவது தொடர்பாக செய்தியாளர்களிடம் காயத்ரி ரகுராம் கூறியதாவது: பாஜகவில் இருந்து விலகுவதாக கூறிய பிறகு என்னை அவமதிக்கும் வகையில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதை வைத்துஎன்னிடம் விசாரணை நடத்தியிருக்கலாமே.
வயதான அம்மாவை வைத்துக் கொண்டு என்ன நடக்குமோ என அச்சமாக இருக்கிறது. தைரியம் இருந்தால் அண்ணாமலையை என்னிடம் பேசச் சொல்லுங்கள். பிரச்சினைகள் குறித்து தேசிய தலைமையிடம் சொல்லிவிட்டேன். ஆனாலும், எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.