

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் விழா நேற்று அதிகாலை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
நாகூர் ஆண்டவர் தர்காவில் 466-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா டிச.24-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, டிச.21-ம் தேதி தர்காவில் உள்ள 5 மினராக்களில் பாய்மரம் கயிறு போடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, டிச.22-ம் தேதி கொடிமரம் என்ற பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இதையடுத்து முக்கிய நிகழ்ச்சியான, சந்தனக்குடம் வைக்கப்பட்ட அலங்கார ரதங்கள் பங்கேற்கும் சந்தனக் கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நாகூரின் முக்கிய தெருக்கள் வழியாக, நேற்று அதிகாலை தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது.
தொடர்ந்து, பாத்தியா ஓதிய பின்னர், சந்தனக் கூட்டில் இருந்து ஹஜரத் ஒருவர் சந்தனக் குடத்தை, பாதுகாப்புடன் தர்காவுக்குள் கொண்டு சென்றார். இதையடுத்து, தர்காவில் உள்ள நாகூர் ஆண்டவர் சமாதியில் தூஆ ஓதி சந்தனம் பூசப்பட்டது.
இந்த விழாவில், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், எம்எல்ஏ முகமது ஷாநவாஸ், திரைப்பட இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
எஸ்.பி. ஜவஹர் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர். கந்தூரி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஜன.6-ம் தேதி இரவு புனிதக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.