

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை லாரி, கார் என ஒன்றன் பின் ஒன்றாக 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கேரளாவில் கோயிலுக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் விஜய் வீரராகவன். ஐ.டி. நிறுவன ஊழியர். இவர் தன் மனைவி வத்சலா, தாயார் வசந்தலட்சுமி, மகன்கள் விஷ்ணு மற்றும் அதிருத் ஆகியோருடன் கேரளாவில் உள்ள ஒரு கோயிலுக்கு 2 தினங்களுக்கு முன்பு சென்றார். பின்னர், நேற்று இரவு சென்னை நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, நேற்று காலை 3 மணியளவில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ஐயனார்பாளையம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் சாலையில் காரை மெதுவாக இயக்கிக் கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து வந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாரதவிதமாக காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய லாரியின் பின்னால் தொடர்ந்து வந்த மற்றொரு லாரியும் மோத, கார் கடும் நெருக்கடியில் சிக்கி, முன்னால் சென்ற மற்றொரு லாரி மீதும் மோதியது.
2 லாரி, 2 கார், பேருந்து சேதம்: இதில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொள்ள 2 லாரிகள், 2 கார்கள் மற்றும் ஒரு தனியார் பேருந்து என 5 வாகனங்கள் சேதமடைந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திட்டக்குடி டிஎஸ்பி காவியா மற்றும் வேப்பூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக் குறித்து வேப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 மணி நேரம் நெரிசல்: இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஐயனார்பாளையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 மணியளவில் ஏற்பட்ட நெரிசல் காலை 7 மணி வரையிலும் தொடர்ந்தது.