Published : 04 Jan 2023 04:00 AM
Last Updated : 04 Jan 2023 04:00 AM
கோவை / பொள்ளாச்சி: திமுக ஆட்சியில் காவல்துறையி னருக்கே பாதுகாப்பில்லை என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து கோவை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கோவை மாவட்டம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. எந்த பணிகளும் நடைபெறவில்லை. அனைத்து சாலைகளும் பழுதடைந்துள்ளன. பழுதடைந்துள்ள சாலைகளை சீர் செய்ய வேண்டும். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அந்த திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்.
கே.பழனிசாமி முதல்வராக இருந்தபோது திமுக கூட்டணி கட்சியினர், தொட்டதற்கெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எங்களையெல்லாம் அடிமைகள் என்று கூறி வருகின்றனர். நாங்கள் எந்தக் காலத்திலும் யாருக்கும் அடிமை இல்லை. ஆனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அடிமைகளாக உள்ளன. திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை.
காவல்துறையைச் சேர்ந்த ஒரு சகோதரிக்கு திமுகவினர் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம், இடிகரை, நரசிம்ம நாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் எம்.எல்.ஏ பங்கேற்று பேசினார்.
நெகமம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நெகமம் பேரூராட்சி பகுதி அதிமுக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியினர், திமுக அரசு, விலைவாசி உயர்வை கண்டித்து கோஷமிட்டனர். இதேபோல, ஆனைமலை பேரூராட்சி, வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி, ஒடையகுளம் பேரூராட்சி பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT