Published : 04 Jan 2023 04:05 AM
Last Updated : 04 Jan 2023 04:05 AM
கோவை: பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர்களை கைது செய்ய விடாமல் தடுத்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை விருகம்பாக்கத்தில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்துள்ளது. இதில் எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், எம்எல்ஏ பிரபாகர்ராஜா உள்ளிட்ட திமுகவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது, இந்த கூட்டத்துக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்தக் கொடுமை தாங்காமல் அந்தப் பெண் காவலர் கதறி அழுதிருக்கிறார். இந்த செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பொது வாழ்க்கையில் பயணிக்கும் பெண்ணாக, என் மனம் வேதனையில் துடிக்கிறது. இந்த கொடுமை தொடர்பாக, நீண்ட தாமதத்துக்கு பிறகு, பிரவீன், ஏகாம்பரம் என்ற இரு திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் தலைநகரில், இரண்டு பெண் எம்.பி.க்கள் பங்கேற்ற கூட்டத்தில், பெண் காவலர் ஒருவருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. திமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகளை, சம்பவ இடத்திலேயே காவல் துறையினர் பிடித்துள்ளனர். ஆனாலும், அந்த கயவர்கள் உடனடியாக கைது செய்யப்படவில்லை. பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளை கைது செய்ய முடியாத அளவிற்கு, காவல் துறையினரின் கரங்களைக் கட்டிப்போட்ட அந்த அதிகார மையம் யார் என்பதை, காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளை கைது செய்யவிடாமல் காப்பாற்றியவர்கள் எம்எல்ஏவாக இருந்தாலும், திமுகவில் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT