

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டு கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், பொருப்பாறு, திருமூர்த்தி மலை, ஈசல் திட்டு, பூச்சி கொட்டாம்பாறை, குருமலை, குழிபட்டி, மாவடப்பு, மேல் குருமலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. அங்கு சுமார் 4,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இதில் கோடந்தூர், தளிஞ்சி, மாவடப்பு, குழிபட்டி உள்ளிட்ட இடங்களில் வாரம் இருமுறை மட்டுமே இயங்கும் அரசு தொடக்கப் பள்ளிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் குழந்தைகள் பயின்று வருகின்றனர். மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் நிலவுவதால், அவர்களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மலைவாழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாகவே சாதிச்சான்று கிடைக்காமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறமுடியவில்லை. மருத்துவ வசதியும் இல்லாததால், வீடுகளிலேயே சுகப் பிரசவமான குழந்தைகளுக்கு 15 வயதாகியும் பிறப்புச் சான்று கிடைக்கவில்லை.
அண்மையில் மலைக் கிராமத்துக்கு ஆய்வுக்கு வந்த ஆட்சியரிடம் இது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. கோட்டாட்சியர் மூலம் சாதிச்சான்று வழங்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்தார். அதற்காக ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.500 அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததால், 21 குழந்தைகளுக்கான தொகை செலுத்தினோம்.
ஆனால், இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களிடம் பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என கல்வித் துறை கட்டாயப்படுத்துகிறது. உரிய நேரத்தில் வழங்காவிட்டால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, அரசின் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட எந்த சலுகையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கோட்டாட்சியர் விரைந்து நடவடிக்கை எடுத்து சான்றுகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சலஜா கூறும்போது, ‘‘பிறப்புச் சான்றிதழுக்காக பணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் சான்றிதழ்கள் தயாராக உள்ளன. அடுத்த வாரத்தில் மலைக் கிராமத்துக்கே சென்று சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும்’ என்றார்.